ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரின் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை : ரூ.20 லட்சம் ரொக்கமும் அபேஸ்… 6 தனிப்படை அமைப்பு!!
Author: Babu Lakshmanan27 August 2022, 11:05 am
காஞ்சிபுரம் : பிரபல தொழிலதிபரின் வீட்டில் சுமார் 2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 தனிப்படையை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பகுதியில் பிரபல தொழிலதிபரான கணபதி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தன் தாயாரின் ஈம சடங்கு வைபவத்திற்காக ராமேஸ்வரத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று மாலை தனது இல்லத்திற்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்புறமாக சென்று பார்த்த பொழுது பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே மூன்று பீரோக்களில் வைத்திருந்த சுமார் 300 சவரன் தங்க நகைகளும், வைர நகைகளும், சுமார் 20 லட்ச ரூபாய் ரொக்க பணமும் கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டார்.
தனது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த தங்க, வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியுற்ற கணபதி, டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு தனிப்பட்ட முறையில் தகவல் அளித்தார்.
அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .
பிரபல தொழிலதிபரும், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான கணபதியின் வீட்டில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கணபதியின் வீட்டின் அருகில் உள்ள செல்பேசி கோபுரத்தில் இருந்து கொள்ளை போன நேரத்தில் பயன்படுத்திய எண்களை வைத்து சுமார் 15 நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.