தாயின் கண்ணீரை இழப்பீடால் ஈடுகட்ட முடியாது… காவல்நிலையத்திற்கு கையெழுத்து போட சென்ற இளைஞர் மரணம் : கொந்தளிக்கும் அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan27 June 2022, 7:23 pm
கன்னியாகுமரி அருகே காவல்நிலையத்திற்கு கையெழுத்துப் போட சென்ற இளைஞர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் சிறை மரணங்கள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் விக்னேஷ் என்பவரும், திருவண்ணாமலை கலால் காவல்நிலையத்தில் தங்கமணி என்பவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களில் அடுத்தடுத்த 2 நாட்களில், ராஜசேகர், சுப்பிரமணியன் ஆகிய இரு விசாரணை கைதிகள் பலியான சம்பவம் தமிழகத்தையே மேலும் குலை நடுங்கச் செய்தது. முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து, ஏற்பட்டிருப்பது ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே காவல்நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற 22 வயது இளைஞர், போலீசாரின் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று, ஓராண்டுக்குள் 5 லாக்கப் மரணங்கள் ஏற்பட்டிருப்பது போலீசாரின் மீதும், அந்தத் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மீதும், எதிர்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் நிகழ்ந்த லாக்கப் மரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு பாஜகவின் ஆழ்ந்த இரங்கல்கள். இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது.
திமுக அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி விட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது. சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.