கர்நாடக காங்கிரசை கதற விட்ட திருமாவளவன்… ஆதரவு பிரசாரம் எடுபடுமா…? கலகலக்கும் கர்நாடக அரசியல்!

Author: Babu Lakshmanan
5 May 2023, 9:25 pm

வெளிமாநில தேர்தல் பிரச்சாரங்களில் இதுவரை அவ்வளவாக ஆர்வம் காட்டாத விசிக தலைவர் திருமாவளவன் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் வியப்படைய செய்யும் அளவிற்கு கடந்த சில நாட்களாக வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடக மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆயத்தபடுத்துவதற்கு ஏற்ப வெள்ளோட்டம் விடுவது போல் அவருடைய இந்தப் பிரச்சாரம் அமைந்திருக்கிறது, என்கிறார்கள்.

ஏற்கனவே அடுத்த ஆண்டு நடக்கும் ஆந்திர தேர்தலில் 175 இடங்களிலும், 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விசிக போட்டியிடும் என்று 5 மாதங்களுக்கு முன்பு திருமா அறிவித்து இருந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக அந்த மாநில விசிக நிர்வாகிகள் சமீபத்தில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தனர். அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

கர்நாடக தேர்தலுக்கு விசிக ஆயத்தமாகி வருகிறது, அந்த மாநிலத்தில் நாங்கள் போட்டியிடப் போவது உறுதி என்று அண்மையில் திருமாவளவன் கூறியிருந்ததன் அடிப்படையில் கர்நாடக விசிக நிர்வாகிகள் இப்படி வேட்பாளர்களை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இது யாருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ இல்லையோ, கர்நாடக காங்கிரசுக்கு பேரிடியாக அமைந்தது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசும், விசிகவும் ஒரே அணியில் உள்ள நிலையிலும் பாஜக எதிர்ப்பு ஒன்றையே இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் நிலையிலும் கர்நாடகாவில் 23 குதிகளில் விசிக தனது வேட்பாளர்களை நிறுத்தினால்
அது காங்கிரசை தோற்கடிக்க வழி வகுத்துவிடும் என்பதால் திருமாவளவனை ‘கூல்’ செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவே எங்களை ஆதரிக்கும்போது நீங்கள் மட்டும் எதிர்த்துப் போட்டியிடலாமா? என்று சரமாரியாக கேள்வி கணைகளையும் எழுப்பினர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது உங்களுக்கு அமைச்சர் பதவி தரலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் நீங்களோ காங்கிரசை எதிரியாக நினைக்கிறீர்களே? என்று கேட்டு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் திருமாவளவனை மடக்கி தங்கள் வழிக்கு கொண்டு வந்தும் விட்டனர்.

இதனால் வேறு வழியின்றி விசிக அறிவித்ததாக கூறப்படும் 23 வேட்பாளர்களும் வாபஸ் பெறப்பட்டனர். இதையடுத்தே கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்ய திருமாவளவன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஒரு நாளிதழுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில்
தான் எதற்காக காங்கிரசை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் என்பதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறார்.

அதில், “கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்து பேசியபோது, ‘‘நீங்கள் எங்கள் மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவேண்டும்.

40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உங்களின் உதவி தேவைப்படுகிறது. கட்சி மேலிடமும் உங்களை எதிர்பார்க்கிறது என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து டி.கே.சிவகுமாரும் பிரச்சாரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா, தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரும் எனது பிரச்சாரத்தை விரும்பினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களது கருத்தியல் எதிரியான பாஜகவை வீழ்த்துவதற்காகவே இங்கு வந்தேன்.

கர்நாடகா முழுவதும் நான் பயணம் செய்யவில்லை. பெங்களூருவில் காந்தி நகர், சாந்தி நகர், ராஜாஜி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட‌ தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். அதில் காங்கிரஸூக்கு சாதகமான சூழல் இருக்கிறது. நான் சென்ற தொகுதிகளில் தமிழர்களே வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.

பிரச்சாரம் செய்வதற்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால் எங்களது கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் நிறுத்தினர். கட்சியை முழுமையாக கட்டமைக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டாம். வாக்குகளை பிரித்து காங்கிரஸின் தோல்விக்கு காரணமாகி விடக்கூடாது என கூறினேன். அதனால் தேர்தலில் போட்டியிடும் முடிவை அவர்கள் கைவிட்டனர்.

எங்களுக்கு கர்நாடகாவில் நல்ல அடித்தளம் இருக்கிறது. தமிழர்களும், பட்டியல் இன மக்களும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு பிறகு நடைபெறும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் இருக்கிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ஓரிரு தொகுதிகளில் கூட விசிக களமிறங்கலாம்.

இங்கு காங்கிரஸ் வெற்றிபெற்றால் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு நம்பிக்கை ஏற்படும். காங்கிரஸை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ஓரணியில் திரள்வார்கள். நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோரும் பாஜகவை வீழ்த்த கைகோத்திருப்பது ஒரு நல்லதொரு அறிகுறி” என்று அவர் கூறியிருக்கிறார்.

“காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது தொடர்பாக திருமாவளவன் தெரிவித்துள்ள சில கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை பார்க்க முடிகிறது. அது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

“குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் தன்னை சந்தித்தபோது காங்கிரசுக்கு ஆதரவாக வந்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டதாக கூறுகிறார்.
அப்படியென்றால் அண்மையில் கர்நாடக விசிக நிர்வாகிகள் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை எப்படி அறிவித்தார்கள்?… திருமாவளவனை அவர்கள் கலந்து ஆலோசிக்கவில்லையா?…என்ற கேள்விகளும் எழுகின்றன.

அல்லது தேர்தல் நேரத்தில் தன்னிடம் காங்கிரஸ் இறங்கி வந்து ஆதரவு கேட்கவேண்டும் என்று திருமாவளவன் விரும்பினாரா? என்பதும் தெரியவில்லை. சுமார் 1400 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள பெரும் பணக்காரரான டி கே சிவகுமார் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கான அத்தனை செலவுகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் இழுத்தடித்தாரா? ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா தனக்கு அழைப்பு விடுத்ததை கூட பின்பகுதியில்தான் அவர் சொல்கிறார்.

கர்நாடகாவில் மட்டுமல்ல கேரளா, தெலுங்கானா மாநிலங்களில் கூட தனது கட்சி தனித்துப் போட்டியிடுவதை திருமாவளவன் விரும்ப மாட்டார். ஏனென்றால் இந்த மாநிலங்களில் விசிக தனித்துப் போட்டியிட்டால் காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். கேரளாவில் கம்யூனிஸ்ட் தோழர்களும் வருத்தம் அடைவார்கள் என்று கருதி ஒதுங்கிக் கொள்ளத்தான் செய்வார்.

அதேநேரம் ஆந்திராவில் அவருடைய கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஏனென்றால் அங்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவற்றுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தவிர ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்தில்தான் உள்ளது.

அதேநேரம் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது திருமாவளவன் மறந்தும் கூட பேசாத ஒரு விஷயம் உண்டு.

அது கர்நாடக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று கூறியிருந்ததுதான். இது குறித்து திருமாவளவன் வாய் திறக்கவே இல்லை. தமிழக விவசாயிகளையோ தமிழர்களையோ பெரிதும் பாதிக்கும் விஷயங்களை பற்றி அவர் தமிழகத்தில் மட்டும்தான் வீரமாக பேசுவார். கர்நாடகாவில் மேகதாது அணை பற்றி அவர் மூச்சு கூட விட மாட்டார்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கேலியாக கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 494

    0

    0