மதுபான விநியோகம்; நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி; 6 வருடங்களுக்கு தடை;பாஜக எடுத்த முக்கிய முடிவு,..
Author: Sudha11 July 2024, 9:36 am
கர்நாடகாவில் பாஜக எம் பி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். மதுபான விருந்து நிகழ்ச்சியை நடத்த கலால் துறை அனுமதி வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த சுதாகர் என்பவர் வெற்றி பெற்றார். இதனை கொண்டாடும் வகையில் நெலமங்களாவில் பொதுமக்களுக்கு பாஜகவினர் மதுபான பாட்டில்களை வழங்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
நெலமங்களாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி என்பவர், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு கலால்துறையே அனுமதி அளித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ரூரல் எஸ்.பி.,யான சி.கே.பாபா கூறுகையில், “கலால் துறை அனுமதி அளித்து, ஏற்பாடுகளை கவனிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதில், போலீஸ் துறையின் தவறு இல்லை, அனுமதி வழங்குவது கலால் துறையின் பொறுப்பு.
பாஜக நடத்திய மதுபான விருந்து தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் , இது பாஜகவின் கலாச்சாரம் . நெலமங்களாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வது வேறு விஷயம், அதற்கு முன்பு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
ஒரு பொது நிகழ்ச்சியில் அதன் கட்சியினருக்கு மதுபானம் விநியோகிக்க அதன் எம்.பி.க்கு பாஜக அனுமதி வழங்கியுள்ளது.பாஜக பொதுக்கூட்டங்களில் மது விநியோகம் செய்வதன் மூலம் கலாச்சாரத்தை பாஜக எவ்வாறு உயர்த்திப்பிடிக்கிறது என்பதை பாஜகவின் தேசியத் தலைவர்கள் மக்களுக்குச் சொல்வது முக்கியம் ,” என்றார்.