கருணாநிதியின் பிறந்த தினம் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்… ஜுன் 3ம் தேதி சிலை திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
26 April 2022, 1:37 pm

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள், இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவி கணேசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 19 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தவர். நாம் இன்று காணும் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

தலைவர்களோடு தலைவராக வாழ்ந்த அவர், பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர். நின்ற தேர்தல்கள் அனைத்திலும் வென்ற ஒரே தலைவர் கருணாநிதி தான். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். வரும் ஜூன் 3-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக தூரம் தாண்ட முடியும் என்று அடிக்கடி சொல்வார் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி. நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் அவர். அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதை தனது கடமையாக கருதுகிறது தமிழக அரசு, என்று கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1358

    0

    0