காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் செய்வது அநீதி ; காவிரி நீர் நமது உரிமை ; வாய் திறந்த தமிழக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…!!
Author: Babu Lakshmanan3 October 2023, 4:18 pm
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாக எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 9 வார காலமாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மத்திய அரசும், சம்மந்தப்பட்ட அமைச்சரும் இதில் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு, மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது நமது உரிமை. கர்நாடகா காங்கிரஸ் செய்வது அநீதி தான். அணைகளில் இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொள்ளவே உச்சநீதிமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசும், பாஜக மாநில தலைவரும் ஊடகங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர், என்றார்.