செந்தில் பாலாஜியால் திடீர் சிக்கல்!.. கரூரில் கரையேறுவாரா, ஜோதிமணி…?
Author: Babu Lakshmanan12 April 2024, 8:10 pm
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்பிக்கும், அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதலே மனக்கசப்பு அதிகமாகிவிட்டது என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.
அதிலும் குறிப்பாக 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் இரண்டு நாட்கள் ஜோதிமணி நடத்திய அதிரடி உள்ளிருப்பு போராட்டத்திற்கு பின்பு இந்த விரிசல் இன்னும் அதிகரித்து விட்டது.
மேலும் படிக்க: கோவைக்கு 100 வாக்குறுதி… 500 நாளில் நிறைவேற்றம் ; தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை…!!!
இதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரூரை காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்கக் கூடாது, திமுகவே தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என செந்தில் பாலாஜி சிறையில் இருந்தவாறே திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உண்டு. இதையும் மீறி காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கினால் ஜோதிமணியை நிற்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் கூறுவார்கள்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கடைசி வரை கலந்து கொண்டதால் ஜோதிமணி அவரிடம் தனக்குள்ள நட்பை பயன்படுத்தி கரூர் தொகுதியை வாங்கி விட்டார்.
இதனால் ஜோதிமணிக்காக செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளிலும், பிரச்சாரத்திலும் ஈடுபட மாட்டார்கள் என்று கூறப்பட்டது. அதற்கேற்ப ஜோதிமணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல் மூன்று நான்கு நாட்கள் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திமுக தலைமையிடம் முறையிட்ட பின்பு செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தற்போது தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்றபோதிலும் காங்கிரஸ், திமுகவினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஜோதிமணி தடுமாறி வருவதையும் பார்க்க முடிகிறது.
தவிர கிராம பகுதிகளில் அவர் பிரச்சாரத்திற்கு செல்லும்போது “ஜெயிச்சு அஞ்சு வருஷமாச்சு. எங்க ஊர் பக்கம் நீங்க வரவே இல்லை. எங்க ஊருக்கு எந்த அடிப்படை வசதியும் நீங்க செஞ்சும் தரல. இப்ப தேர்தல்ன்ன உடனே ஓடி வர்றீங்க” என ஆவேசமாக கோஷங்களை எழுப்பி அவருடைய காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஜோதிமணியை திணறடித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில்தான் அவருக்கு சோதனை மேல் சோதனை என்பது போல 2019ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின்போது செந்தில் பாலாஜி அளித்த ஒரு முக்கிய வாக்குறுதி தற்போது விஸ்வரூபம் எடுத்து அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது.
அதன் பின்னணி இதுதான்.
கடந்த, 2016ல் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில், வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், டிடிவி தினகரன் அணிக்கு தாவி, பின்னர் தகுதி நீக்கம் செய்யப் பட்டு எம்எல்ஏ பதவியை இழந்தார்.
அதன் பிறகு திமுகவில் இணைந்த அவர், 2019ல் அத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது, போட்டி கடுமையாக இருந்ததால், 25 ஆயிரம் குடுங்களுக்கு தலா மூன்று சென்ட் நிலம் வழங்கப்படும் என, செந்தில்பாலாஜி தொகுதி முழுவதும் சென்று வாக்குறுதியும் அளித்தார். அதை வரவேற்று, திமுக தலைவர் ஸ்டாலினும், பொதுச் செயலாளர் துரைமுருகனும் பிரசாரம் செய்தனர்.
மேலும் படிக்க: அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு… நள்ளிரவில் நடந்த சம்பவம் ; திமுகவினர் பரபரப்பு புகார்…!!!
குறிப்பாக, புகளூரில் நடந்த கூட்டத்தில், மூன்று சென்ட் நிலம் வழங்கும் திட்டத்தை, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தலாம் என, ஸ்டாலின் பேசினார். அதை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலாயுதம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், செந்தில்பாலாஜி சொந்த செலவில், மூன்று சென்ட் நிலம் வழங்குவார் என, பேசி சூட்டை கிளப்பி விட்டார். இதனால், செந்தில்பாலாஜி அமோக வெற்றியும் கண்டார்.
ஆனால் மூன்று சென்ட் நிலம் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால்தான் 2021 தமிழக தேர்தலில் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியை கேட்டு வாங்கி போட்டியிட்டார் என்று கூறப்படுவதும் உண்டு. அவர் நிறைவேற்றாமல் விட்ட ஏழை குடும்பத்தினர் 25 ஆயிரம் பேருக்கு மூன்று சென்ட் நிலம் தருவேன் என்ற வாக்குறுதியைத்தான் தற்போது அதிமுக கையில் எடுத்துக் கொண்டு அதை பிரச்சார ஆயுதமாக கரூர் தொகுதி முழுவதும் பயன்படுத்தி வருகிறது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிறது. வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. மணப்பாறை, திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தொகுதியாகும். கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவை.
இதனால் செந்தில் பாலாஜியின் மூன்று சென்ட் நில வாக்குறுதியை கரூர் தொகுதியில் அவரிடம் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரும், விராலிமலை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சி விஜயபாஸ்கரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.
இருவரும் கரூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் செந்தில் பாலாஜி 2019 இடைத்தேர்தலில் அளித்த ஏழைகளுக்கு மூன்று சென்ட் நிலம் என்ன ஆச்சு?என்ற கேள்வியை எழுப்பியும், ஊர் தோறும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும் ஜோதிமணியை திணறடித்து வருகிறார்கள்.
குறிப்பாக கரூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இப் பிரச்சாரம் வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுவும் அதிமுக வேட்பாளர் தங்கவேல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் 3 சென்ட் நில வாக்குறுதியை இந்தியில் எடுத்துப் பேசி பிரச்சாரம் செய்வதால் அதுவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
‘2006 திமுக தேர்தல் அறிக்கையில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, தலா 2 ஏக்கர் நிலம் தரப்படும்’ என்கிற வாக்குறுதியை கருணாநிதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு அதை அவரால் நிறைவேற்றவே முடியவில்லை. அதேபோல்தான் செந்தில் பாலாஜியும், அரவக்குறிச்சியில் ஏழை மக்களுக்கு மூன்று சென்ட் நிலம் வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமாக வாக்குறுதி அளித்தார். அதை இன்று வரை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அப்படிப்பட்டவர் ஆதரவுடன்தான் ஜோதிமணி போட்டியிடுகிறார். எனவே காங்கிரஸ் வேட்பாளரை நம்பாதீர்கள் என்று அதிமுகவினர் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து பாஜக வேட்பாளர் செந்தில் நாதனும் “ஜோதி மணியையும் செந்தில் பாலாஜியையும் நம்பவே நம்பாதீங்க. இருவரும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதாக சரித்திரமே இல்லை” என்று தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார்.
இப்படி அடுத்தடுத்து செந்தில் பாலாஜிக்கு அமோக ஆதரவு இருப்பதாக கூறப்படும் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு தொடக்கத்தில் இருந்த முன்னிலையில் தற்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.
இதனால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோதிமணிக்கு கடுமையான சவாலாக அதிமுக வேட்பாளர் தங்கவேலு திகழ்கிறார், என்பதே கள நிலவரம் ஆகும்.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியால் ஜோதி மணிக்கு இப்படியொரு சோதனையா?…