கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டுக்கு சீல்.. மாட்டு வண்டியை வைத்து முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்.. நள்ளிரவில் ஸ்தம்பித்துப் போன அதிகாரிகள்!!
Author: Babu Lakshmanan27 May 2023, 8:55 am
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் உள்ள கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீல் வைத்து விட்டு செல்ல முயன்ற அதிகாரிகள் வாகனத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் மாட்டு வண்டியை இழுத்து வந்து குறுக்கே கட்டியதால் அதிகாரிகள் வந்த 4 வாகனங்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு துணை மேயர் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, நோட்டீசை ஆதரவாளர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட வீட்டிற்குள் துணை மேயர் தாரணி சரவணனின் மனைவி மற்றும் மகன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை, முற்றுகையிட்ட திமுகவினர், அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில், மீண்டும் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.