டெண்டர் விட்டது ஒரு இடம்… சாலை போட்டது வேறு இடம்… கரூர் மாநகராட்சியில் நடந்த கூத்து… சிக்கலில் அதிகாரிகள்..!!
Author: Babu Lakshmanan1 June 2022, 9:45 am
கரூர் : கரூர் மாநகராட்சியில் கரூர், வெங்கமேடு, காந்திகிராமம், தான்தோன்றிமலை உட்பட பல்வேறு பகுதிகளில், 18.2 கோடி ரூபாய் மதிப்பில், 29 கி.மீ., நீளம் தார்ச்சாலை அமைக்கு பணி நடந்து வருகிறது. இதில், டெண்டர் விட்ட இடத்தில் சாலை போடாமல் வேறு இடத்தில் சாலை அமைத்து முறைகேடு நடந்துள்ளாதாக புகார் எழுந்துள்ளது.
கரூர் மாநகராட்சி பகுதியில் தரமற்ற சாலை அமைப்பது உட்பட பல்வேறு முறைகேடு நடந்து வருகிறது. இதில், 37வது வார்டு தான்தோன்றிமலை பூங்கா நகர் வடக்கு பழைய ஐ.ஓ.பி லைனில், 11.10 லட்சம் ரூபாய் தார்சாலை புதுப்பித்தல் டெண்டர் விடப்பட்டது.
ஆனால், இடத்தை மாற்றி, பூங்கா நகர் தெற்கு புதிய ஐ.ஓ.பி., லைனில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. தற்போது சாலை அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.
சாலை அமைக்க ஒரு இடத்திற்கு டெண்டர் விட்டு, மாற்றொரு இடத்தில் சாலை போடப்பட்டுள்ளது அப்பட்டமான விதிமுறை மீறல். மேலும், பூங்கா நகர் வடக்கில், சாலை புதுப்பித்தல் பணிக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், பூங்கா நகர் தெற்கில் மண் சாலையில், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும், நிதி பற்றாக்குறையால், ஏனோ தானோ என்று தரமற்ற முறையில் சாலை போடப்பட்டுள்ளதாகவும், மழைநீர் வடிகால் வசதியின்றி சாலை அமைக்கப்பட்டுள்ளதால், தற்போது பெய்த சிறிய மழைக்கு தார் பெயர்ந்து சாலை மோசமாக காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, வேறு இடத்தில் சாலை அமைக்க எப்படி அதிகாரிகள் அனுமதித்தனர் மற்றும் இதுபோல, எத்தனை இடங்களில் நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கரூர் நெடுஞ்சாலை துறையில், 3 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகும் கூட, அதிகாரிகள் முறைகேட்டில் எப்படி ஈடுபட்டனர் என்ற கேள்வியும், இதுபோன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடையேயும், சமூக நல ஆர்வலர்களிடமும் எழுந்துள்ளது.