அரசு விழாவில் பேனருக்கு பதிலாக திமுக கொடி… சர்ச்சையில் சிக்கிய குளித்தலை திமுக எம்.எல்.ஏ..!!
Author: Babu Lakshmanan5 October 2022, 8:06 pm
குளித்தலையில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட எம்எல்ஏ, அரசு பேனருக்கு பதிலாக திமுகவின் கட்சி கொடி கட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலம் ஊராட்சி மேல ஆரியம்பட்டி மற்றும் இரணியமங்கலம் ஊராட்சி சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய பகுதி நேர நியாய விலை கடைகள் அமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் கலந்துகொண்டு புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, குளித்தலை வட்டாட்சியர் கலியபெருமாள், திமுக மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், குளித்தலை திமுக ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், மருதுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பிச்சைக்கண்ணு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
இதில் மேலஆரியம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அரசு சார்பில் வைக்கப்படும் பேனருக்கு பதிலாக திமுக கட்சி கொடி மட்டுமே அமைக்கப்பட்டு அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியால் சர்ச்சை எழுந்துள்ளது.