நீட் தேர்வு தோல்வி பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை : 2வது ஆண்டாக நீட் தேர்வு எழுதிய நிலையில் விபரீத முடிவு
Author: Babu Lakshmanan12 August 2022, 1:39 pm
கரூர் : கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமுழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவருக்கு மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள். ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ (18). தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பி எஸ் கிடைக்கவில்லை. ஆனால், கால்நடை மருத்துவருக்கான கட்ஆப் கிடைத்துள்ளது. ஆனால், எம்.பி.பி.எஸ் தான் படிப்பேன் என கூறி வந்த அந்த மாணவி, இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.
வேங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வினை எழுதி வந்த மாணவி பாட்டி வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு பலரும் சென்று விட்ட நிலையில், தனியாக இருந்த மாணவி பாட்டியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த பாட்டி மாணவியை பலமுறை கூப்பிட்டும் வராததால், வீட்டினுள் சென்று பார்த்த போது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தவர்கள், மாணவியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில், குறைவான மதிப்பெண் வந்து விடுமோ என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக உறவினர்களிடம் கூறி வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.