எங்க கட்சிய அசிங்கப்படுத்தீட்டே இருக்காங்க… திமுக மீது கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோபம்… மீண்டும் புலியூர் பேரூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு
Author: Babu Lakshmanan26 March 2022, 4:30 pm
கரூர் : கரூர் அருகே பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக உறுப்பினர்கள் வருகை தராததால் புலியூர் பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 15 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக – 12, சிபிஐ – 1, பிஜேபி – 1, சுயேட்சை 1 வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
கடந்த 4ம் தேதி நடைபெற்ற தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி, முன்மொழிபவர் ஒருவரும், அதை வழிமொழிபவர் ஒருவரும் இல்லாத நிலையில் வேட்புமனு பெறாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் 12 பேரில் 3வது வார்டில் வெற்றி பெற்ற புவனேஷ்வரி தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இதனை அடுத்து அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்யாததால் அவர் வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் பாலசுப்ரமணி அறிவித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் புவனேஷ்வரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக 2 பேர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்த ஆயத்தமான நிலையில் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். பாஜக உறுப்பினர் விஜயகுமார், சிபிஐ உறுப்பினர் கலாராணி, திமுகவை சார்ந்த துணை தலைவர் அம்மையப்பன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
காலை 9.30 மணிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10 மணி வரை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் தமிழ் செல்வி, லோகநாதன் ஆகியோர் காத்திருந்தனர். தேர்தல் நடத்த 50% மேல் அதாவது 8 உறுப்பினர்களாவது பங்கேற்க வேண்டும் என்ற விதி இருப்பதால் 3 பேர் மட்டுமே பங்கேற்றதால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து 3 உறுப்பினர்களும் வெளியேறினர். இதனையடுத்து வெளியில் வந்த சிபிஐ உறுப்பினர், என்னை மட்டும் அல்ல எனது கட்சியையும் சேர்த்து அசிங்கப்படுத்துகின்றனர். 2 கட்சி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், துணை தலைவர் அம்மையப்பன் அனைத்து திமுக உறுப்பினர்களையும் வீட்டிற்கு அழைத்து வைத்திருந்ததாகவும், அவர் தான் உறுப்பினர்களை வர விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.