தெலங்கானாவில் இன்று பந்த்.. கேசிஆர் மகள் கைதைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு..!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 8:51 am

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் முடிவில் மேலவை உறுப்பினரான கவிதா கைதாகியுள்ளார். இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் தலைவர் கவிதா கடைசியாக கடந்த மார்ச் 2023ல் ED ஆல் விசாரிக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் தகவல் தொடர்புத் தலைவரான விஜய் நாயருடன் கவிதா தொடர்பில் இருந்ததாகவும், அவர் மதுபானத் தொழிலைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தும் போது தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கவிதாவின் கைது நடவடிக்கை பாஜக, காங்கிரஸின் திட்டமிட்ட சதி என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கவிதா கைது செய்யப்பட்டிருப்பது பிஆர்எஸ் கட்சியின் மன உறுதியை குலைக்கும் முயற்சி என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கும் பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதனால், அசம்பாவீதம் ஏற்படாமல் இருக்க தெலங்கானா மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!