CM ஸ்டாலின் – KCR போடும் அரசியல் கணக்கு… திமுகவின் தூதராக சென்றாரா திருமாவளவன்…? கதிகலங்கும் காங்கிரஸ்!!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 3:55 pm

தேசிய அரசியலில் KCR!

தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலை தனது தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கடுமையான போட்டியை ஏற்படுத்த கடந்த ஓராண்டாகவே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், என்பது தெரிந்த விஷயம்.

அதன் ஒருபகுதியாக ஏற்கனவே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், மத சார்பாற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரை அவர் சந்தித்தும் இருக்கிறார்.

தேசிய கட்சி

இதற்காக தேசிய அளவில் பாரத் ராஷ்டிர சமிதி என்னும் ஒரு கட்சியை தொடங்கப் போவதாக கடந்த ஜூன் மாதமே தகவல் வெளியானது. அதாவது தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் உள்ள தெலுங்கானா என்பதை மட்டும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தப் போவதாக கூறப்பட்டது.

அதேநேரம் மாநில அரசியலையும் அவர் விட்டு விட தயாராக இல்லை. இதற்காக மாநில தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவராகவும், மாநில முதலமைச்சராகவும் தனது மகனும் எம்.எல்.ஏ.வுமான K.T. ராம ராவை நியமிக்கும் வகையில் அவர் தயார் படுத்தியும் வருகிறார்.

இந்த நிலையில்தான் ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி தொடங்குவதையொட்டி விஜயதசமி நாளில் சந்திரசேகர ராவ் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார்.

இதில் கலந்துகொண்ட வெளி மாநிலத்தின் முக்கிய பிரமுகர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, இன்னொருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறு சிறு கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றாலும் கூட திருமாவளவனை தன் அருகில் அமர வைத்து விருந்து உண்ண வைத்திருக்கிறார், கே.சந்திரசேகர் ராவ்.

இதேபோல கட்சியின் தலைமை அலுவலகத்தில் அன்று மதியம் நடந்த பொதுக் குழு கூட்டத்திலும் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது கட்சியின் பெயரான தெலுங்கானா ராஷ்டிர சமிதியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றுவதற்கான தீர்மானத்தை கே.சந்திரசேகர ராவ் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாஜகவுக்கு பாடம்

புதிய கட்சி விழாவில் பேசிய சந்திரசேகர ராவ், “இனி பாரத் ராஷ்டிர சமிதி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும். குறிப்பாக, மத ரீதியாக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் காணும் பாஜகவுக்கு மாற்றாக நமது கட்சி இருக்கும். பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து, பாஜகவுக்கு பாடம் புகட்ட இதுவே சரியான தருணம். ஒருமித்த கொள்கைகள் கொண்ட கட்சிகளை இணைத்து தேர்தல் வியூகம் அமைப்போம். அத்துடன் நல்லாட்சிக்கான மாடலாக தெலுங்கானா மாநில ஆட்சி திகழ்கிறது என்பதை தேசிய அளவில் நமது புதிய கட்சி பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்லும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அடுத்து நடைபெற இருக்கும் குஜராத், கர்நாடகா,மராட்டியம், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.

திருமாவளவன்

இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் திருமாவளவன் பங்கேற்றதும், அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலின் தூதராகத்தான் திருமாவளவன் இந்த விழாவில் பங்கேற்றார் என்று கூறப்படுவதுதான் இதற்கு காரணம்.

சந்திரசேகர ராவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விழாவிற்கு ஏன் அழைக்கப்படவில்லை?என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இதற்கான விடை மிகச் சுலபமான ஒன்று. தெலுங்கானா மாநிலத்தில் பாஜக அபார வளர்ச்சி கண்டிருந்தாலும் அங்கு இன்று வரை எதிர்க்கட்சி அந்தஸ்தில்
காங்கிரஸ்தான் உள்ளது.

திமுகவுக்கு வலை

அதேநேரம் தமிழகத்தில் திமுக கூட்டணியில் தற்போது வரை காங்கிரஸ் இடம் பிடித்தும் உள்ளது. திமுக ஒதுக்கும் தொகுதிகள் சரி பாதியாக குறைந்தாலும் கூட பரவாயில்லை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்க விரும்புகிறது.

இதுபோன்றதொரு நிலையில் தெலுங்கானாவில் காங்கிரசுக்கு எதிராக செயல்படும் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியுடன் இப்போதே கூட்டணி அமைத்துவிட்டால் அது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் தலைமையை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியில் சந்திரசேகர ராவ் உடன் இணைந்து போட்டியிடுவாரா?…என்ற கேள்விகளும் எழும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனது தலைமையில் கூட்டணி அமைவதையே விரும்பும். இது போன்ற நிலையில் காங்கிரசுடன் நட்பு பாராட்டி வரும் கட்சிகளையே சந்திரசேகர ராவ் குறிவைக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

MK Stalin - Updatenews360

அந்த வகையில் தமிழகத்தில் இருந்து திமுகவை தன்வசம் இழுக்கவே கே.சி.ஆர். நினைப்பார். ஆனால் இப்போதே அதற்கான முயற்சிகளில் இறங்கினால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்று அவர் கருதியிருக்கலாம். தற்போதைய சூழலில் திருமாவளவன் உடனான நட்புறவை வலுப்படுத்தி, அதன்மூலம் திமுகவை
2024 ஜனவரி மாதத்துக்குள் திமுகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாம் என்று சந்திரசேகரராவ் கணக்கு போடுகிறார்.

அதேநேரம் தேசிய கட்சியாக பாரத் ராஷ்டிர சமிதியை சந்திரசேகர ராவ் மாற்றி விட்டாலும் கூட அதைத் தேர்தல் கமிஷன் பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது.

ஏனென்றால் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை தொகுதிகளில் 2 சதவீத இடங்கள், அதாவது 11 தொகுதிகளை குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றியும் பெறவேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஒரு கட்சியின் தலைவர் வைக்கும் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டாலும் கூட எதிர்வரும் தேர்தலில் அந்தக் கட்சி நிர்ணயிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப் பேரவை தொகுதிகளையோ அல்லது ஓட்டு சதவீதத்தையோ பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதை சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி சாதித்துக் காட்டுமா? என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

மாநிலத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்து வரும் சந்திரசேகர ராவுக்கு தீவிர எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. அதைத் தடுத்து தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே பாரத் ராஷ்டிர சமிதி என்னும் புதிய வேடத்தை அவர் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை பாஜக வைத்துள்ளது.

தெலுங்கானா மாநில காங்கிரசோ, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய சந்திரசேகர ராவ் விரும்பவில்லை. அதனால் அவருடைய தேசியக்கட்சியால் பாஜகவுக்குத்தான் பலன் கிடைக்கும் என்று கொந்தளிக்கிறது.

திமுகவின் திட்டம் – காங்., அதிருப்தி

“சந்திரசேகர ராவின் தேசிய கட்சி தொடக்க விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலின் தூதராகத்தான் பங்கேற்றிருக்கிறார். இது ஒரு வெள்ளோட்டம் விடும் போக்குதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த 6 மாதங்களாகவே, திருமாவளவன் தமிழகத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறார்.
எந்தவொரு பிரச்சனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டாலும் சொல்லி வைத்தாற்போல் இந்த மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில்தான் விடுகின்றன. திமுக அரசுக்கு எதிராக கண்டும், காணாமலும் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்துகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் தமிழக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் யாரையும் தன்னுடன் அழைத்துச் செல்லாமல் திருமாவளவன் மட்டுமே ஹைதராபாத் சென்று சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். இதை வைத்தே ஸ்டாலினின் தூதராக திருமாவளவன் ஹைதராபாத் சென்றுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

Stalin_KSAlagiri - updatenews360

ஏனென்றால் ஸ்டாலின் நேரடியாக சென்று கலந்துகொண்டிருந்தால் காங்கிரஸ் மேலிடத்தின் கோபத்திற்கு திமுக உள்ளாக நேரிடும். ஒருவேளை 2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது திமுகவுக்கு பாதகமாகவும் அமையும். இதையெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் கணக்கு போட்டுத்தான் திருமாவளவனை ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றே கருதத் தோன்றுகிறது.

இதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர்களான கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றோரை கதிகலங்க வைத்துள்ளது. சந்திரசேகர ராவ் தலைமையில் அமையும் மூன்றாவது அணியில் திமுக இணைந்துவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸின் நிலை என்னவாகும் என்று அவர்கள் புலம்பவும் தொடங்கி இருக்கின்றனர், என்கிறார்கள்.

அதேநேரம் விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடகா, குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் பெறும் வெற்றி தோல்வியின் அடிப்படையில்தான் திமுக எந்த ஒரு முடிவையும் எடுக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. அதனால் திமுகவின் தூதராக சந்திரசேகரராவ் கட்சியின் தொடக்க விழாவிற்கு திருமாவளவன் சென்றதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 498

    0

    0