தங்கக் கடத்தல் வழக்கில் சிக்குகிறாரா பினராயி விஜயன்..? கட்டகட்டாக பணம்…. ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்தால் ஆடிப்போன அதிகாரிகள்..!!
Author: Babu Lakshmanan8 June 2022, 11:10 am
கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் தூதரக மட்டத்தில் நடந்த முதல் கடத்தல் சம்பவம் என்பதால், இந்த சம்பவம் தேசிய அளவில் புயலை கிளப்பியது.

இந்த கடத்தல் சம்பவத்தில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பிருப்பதாக ஒருபுறம் தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடையே, இந்தத் தங்கக்கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும்படி ஸ்வப்னா சுரேஷுக்கு நெருக்கடி கொடுத்ததாக ஆடியொ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. மேலும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பழிசுமத்த மத்திய அரசு இதுபோன்று செய்வதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த ஊழலில் நேரடியாக ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர், மனைவி கமலா, மகள் வீணா, கூடுதல் தனிச் செயலர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் அதிகாரி நளினி நெட்டோ, முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், கடந்த 2016ஆம் ஆண்டு துபாயில் இருந்த முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூபாய் நோட்டுகள் அடங்கிய பைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்கும் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.