தமிழக நிலங்களை கேரளா அபகரிப்பதா…? கொந்தளிக்கும் தலைவர்கள்! வாய் திறக்காத மார்க்சிஸ்ட்!

Author: Babu Lakshmanan
11 November 2022, 5:55 pm

எல்லை ஆக்கிரமிப்பு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக நெருங்கிய நட்பு இருப்பது தெரிந்த விஷயம்.

ஆனால் அதையே கேரள அரசு அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்தும் விடுகிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையோரம் நடந்து வரும் ஒரு நிகழ்வு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

தமிழக மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலை வட்டத்தைச் சேர்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை கிராமங்களில் டிஜிட்டல் முறையில் மறு நில அளவீடு செய்வதாக கூறி தமிழகத்தின் வருவாய் நிலங்களையும் சேர்த்து கேரள அரசுக்கு சொந்தமானது என பதிவு செய்து அந்த மாநில அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகள் வைப்பதாக தமிழக விவசாயிகள் தரப்பில்
பரபரப்பு புகார் கூறப்படுகிறது.

கடந்த 1-ம் தேதி முதல் இந்தப் பணியில் கேரள பொதுப் பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரள அரசின் இந்த செயலுக்கு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழர் அமைப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எல்லை நில மறு அளவீடு விவகாரத்தில் திமுக அரசு பணிந்து போய் விடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பானது

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், “தமிழக-கேரள எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தை கேரள அரசு நவம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கேரளா இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பானதாகும்.

தமிழக கிராமங்களில் அத்துமீறிஉள்புகுந்து பல பகுதிகளை மலையாளிகள் ஆக்கிரமித்துள்ளனர். குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் மலையாளிகள் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறுவது தொடர்கிறது. இவ்வாறு ஆக்கிரமித்த பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று காட்டவே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இதை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் நமது நிலப்பகுதிகளை இழக்க வேண்டிவரும்” என்று எச்சரித்துள்ளார்.

அலட்சியம் கூடாது

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பதிவில், “தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக, ‘இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்து செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்து போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதி காப்பது முறையல்ல. இது குறித்து தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும் என்றும் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.’வரும் முன் காப்போம்’ என்றவர்கள் ‘போன பின் பார்ப்போம்’ என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக அரசு இப்போதாவது விழித்து கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்கவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும்போது, “தமிழக எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை மின்னணு நில அளவை என்ற பெயரில் கேரள எல்லைக்குள் சேர்க்கும் கேரள மாநில கம்யூனிச அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. களவு போகும் தமிழக எல்லைப்பகுதியை காத்திடாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. கேரள அரசின் இத்தகைய நில அபகரிப்பை திமுக அரசு இனியும் அனுமதித்தால் ஏறத்தாழ 1500 சதுர கி.மீ. வரையிலான எல்லைப் பகுதியை தமிழகம் இழக்க நேரிடும்.

Seeman - Updatenews360

கேரளாவின் முறைகேடான அபகரிப்புகளால் நிலங்களையும், வளங்களையும் தமிழகம் இழப்பதோடு மட்டுமின்றி, முல்லைப் பெரியாற்றுச் சிக்கலைப் போன்று பல ஆற்றுநீர்ச் சிக்கல்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தமிழக அரசை எச்சரிக்கிறேன். ஆகவே, இனியும் மின்னணு மறு நில அளவீடு என்ற பெயரில் தமிழக எல்லைப் பகுதிகளை அபகரிக்க நினைக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு அனுமதித்திடக் கூடாது,” என்று குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக அரசு விளக்கம்

இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக வருவாய்த் துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக- கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநில அளவை பணியினை நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இப்பொருள் குறித்து ஏற்கனவே கடந்த 9-11-2022 அன்று வருவாய்த் துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக – கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறி இருக்கிறார்.

TN Secretariat- Updatenews360

“இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தாலும் கூட திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்டவை இப்பிரச்சனை குறித்து வாயே திறக்கவில்லை என்பதுதான்.

மவுனம் ஏன்..?

முன்பெல்லாம் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரு மாநில பொது எல்லைப்பகுதியில் கேரள அரசு நடத்தும் நில மறு அளவீடு குறித்து கண்டனம் தெரிவிக்கவே தயங்குகிறார். கடந்த ஒன்றை ஆண்டுகளாக அவர் இப்படி நடந்து கொள்வது தான் புரியாத புதிராக இருக்கிறது” என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

“பல ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இந்த நிலம் கேரள அரசுக்கு சொந்தமானது என்பதை வெளிப்படுத்தும் விதமான அறிவிப்பு பலகைகள் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

கேரள பொதுப்பணித் துறை அதிகாரிகள் டிஜிட்டல் முறையில் மலைப்பகுதி நிலங்களில் அளவீடு செய்யும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. அப்படி இருந்த போதிலும், இந்த விவகாரத்தை தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள்
தீவிரமாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.

தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது என்று மட்டும் அவர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் கேரள அரசின் நடவடிக்கைகள் மீது தமிழக அரசுக்கு தற்போது சந்தேகம் வந்துள்ளது என்றுதானே அர்த்தம் ஆகிறது?…

cpm - updatenews360

கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடக்கிறது என்பதால் இங்கே உள்ள அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுப்பது சரியானது அல்ல. யார் தவறு செய்தாலும் அதை கண்டிக்க மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன் வரவேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து போய்விடும்.

மேலும் கடந்த 10 நாட்களாக கேரள அரசின் இந்த நில அளவீடு தேனி மாவட்டத்தின் எல்லையில் உள்ள தேவாரம் மலைப் பகுதிக்கு உட்பட்ட தமிழக கிராமங்களிலும் நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் பிரச்சனை உருவாகியுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு இதுபற்றி உடனடியாக
தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டிய தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியும் ஓபிஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் ஏன் அதை செய்ய தவறினார்?.. தனது தொகுதியில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல்தான் அவர் இருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

திமுகவின் ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பாராட்டும் ரவீந்திரநாத், இப்போது மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை” என்றும் அந்த அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனர்.

  • Abishek Aishwarya rai நடிகையுடன் காதல்? புயலை கிளப்பிய கடிதம்.. ஐஸ்வர்யா – அபிஷேக் பிரிவுக்கு காரணமா?
  • Views: - 495

    0

    0