கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; 7 பேர் பலி; தொடர் பிரச்சினையால் அவதியுறும் கடவுளின் தேசம்,..
Author: Sudha30 July 2024, 8:56 am
கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நிஃபா,மூளையைத் தின்னும் அமீபா என அடுத்தடுத்து செய்திகளில் அடிபடுகிறது கேரள மாநிலம்.
கேரள மாநிலம் வயநாடு – முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.இந்த கனமழையால் அதிகாலை 2 மணியளவில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கூடம் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் முகாமாக இருந்தது. பள்ளியின் அருகே அமைந்துள்ள வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சென்று வருவதற்கான பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது.
அதனால் சுமார் 400 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி உள்ளதாக தெரிகிறது.தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை மற்றும் சாலைகள் சேதம் போன்ற காரணங்களால் மீட்புப் பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகளை விரைந்து சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரமும் அப்குதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி ஒரு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.