ஜரூராக நடந்த கஞ்சா விற்பனை; போலி சாமியார் நடத்திய ஆசிரமத்தில் காளான் கஞ்சா; இளைஞர்களை குறிவைக்கும் கும்பல்,..
Author: Sudha28 July 2024, 4:24 pm
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மேல்மலை கிராமப் பகுதியில் போதை காளான், கஞ்சா சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கூக்கால் மலை கிராமப் பகுதியில் போலி ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அந்த ஆசிரமத்திற்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து அவர்களுக்கு போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து கூக்கால் மலை கிராம பகுதியில் அமைந்துள்ள அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஆசிரமத்திற்கு உள்ளே போதை காளான் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்ய இந்த ஆசிரமத்திற்கு வந்துள்ள தகவல் தெரிந்ததை அடுத்து ஆசிரமத்தில் தங்கி இருந்த சுற்றுலாப் பயணிகள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையினர் விசாரணையில் உசிலம்பட்டி வடகாடு பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் கொடைக்கானல் மேல்மலை கூக்கால் மலைப்பகுதியில் நிலம் வாங்கி அங்கு அழகன் ஆசிரமம் என்ற போலி ஆசிரமத்தை நடத்தி வந்ததும், தன்ராஜ் பி.இ பட்டதாரி என்றும் விசாரணையில் தெரியவந்தது. இவரும் போலிச் சாமியார் வேடம் அணிந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா , போதைக் காளான் விற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொடைக்கானல் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது பெயரளவிற்கு சோதனை இடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.