காங். மீது விஜயதாரணி ‘ஓபன் அட்டாக்’! கடும் அதிருப்தியில் 2 MP, 10 MLA?….

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2024, 7:28 pm

காங். மீது விஜயதாரணி ‘ஓபன் அட்டாக்’! கடும் அதிருப்தியில் 2 MP, 10 MLA?….

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. முந்தைய மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி சில விஷயங்களில் மிகவும் அசட்டையாக இருந்தது, தமிழகத்தில் அக்கட்சியை முட்டு சந்துக்கு தள்ளிவிட்டுள்ளது. அதன் எதிரொலியாகவே விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்ளும் நிலையும் உருவாகிவிட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியின் ஆயுட்காலம் மூன்று வருடங்கள்தான். ஆனால் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப் பதவிக்கு நியமிக்கப்பட்ட கே எஸ் அழகிரி டெல்லி மேலிடத்திடம் தொடர்ந்து கால அவகாசம் வாங்கி வாங்கியே ஐந்து ஆண்டுகள் முழுமையாக அப்பதவியில் ஒட்டிக்கொண்டு விட்டார்.

எனினும் திமுக தலைமையிடம் சோனியாவும், ராகுலும் எதிர்பார்க்கும் குறைந்தபட்சம்
12 தொகுதிகளை பெறுவதற்கு எந்தவொரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது அவருக்கு முதல் வினையாக அமைந்தது.

தவிர தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கச் சொன்னால், இவரோ கட்சியில் கோஷ்டிகளின் எண்ணிக்கையை வளர்த்தது தான் மிச்சம் என்று கட்சி நிர்வாகிகளே கேலி பேசும் அளவிற்கு மாறியது.

மூன்றாவதாக மூத்த தலைவர்களான ஈ வி கே எஸ் இளங்கோவன், கே வி தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர் போன்றவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு மிஞ்சும் அளவிற்கு திமுகவுடன் ஐக்கியமாகி போனது.

இந்த மூன்றும்தான் கே எஸ் அழகிரியின் தலைவர் பதவி பறிப்பிற்கு முக்கிய காரணங்கள் என்கிறார்கள்.

இது தவிர கடந்த வாரம் காங்கிரஸ் மேலிடம் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் நடத்திய ஜூம் மீட்டிங்கின்போது ஜோதிமணியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து
கே எஸ் அழகிரி அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்தி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்தே அவருடைய பதவி பறிக்கப்பட்டது என்ற காரணமும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதாரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கிடைக்க விடாமல் எல்லா வழிகளிலும் கே எஸ் அழகிரி முட்டுக்கட்டை போட்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நிலையில்தான் விஜயதாரணி பாஜகவில் சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளார். அதற்கான காய்களை அவர் சாமர்த்தியமாக நகர்த்தியும் வருகிறார்.

இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், கடந்த, ஐந்து நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருக்கும் விஜயதாரணி எங்கிருக்கிறார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் எங்களுடன் போனில் பேச மறுக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே விஜயதாரணி போன் மூலம் சென்னையில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு விரிவாக பேட்டி அளித்ததுதான்.

அவர் கோபம் கொப்பளிக்க கூறும்போது, “விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக
3 முறை சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும் செய்துள்ளேன். குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதி மாநிலத்தின் முன் மாதிரியான தொகுதியாக திகழ்ந்து வருகிறது.

விளவங்கோடு மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்து இருக்கிறேன்.

ஆனால் காங்கிரசில் உழைப்புக்கு தகுந்த மரியாதை கிடைக்கவில்லை. தற்போது கட்சியின் சட்டப் பேரவை தலைவராக எங்களது மாவட்டத்தைச் சேர்ந்த கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும்போது கட்சி எம்எல்ஏக்கள் அனைவரிடமும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் யாரிடமும் கேட்காமலேயே ஆலோசனை நடத்தாமலேயே ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அதேபோல மாநில காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.
பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். நான் பாஜகவில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

விஜயதாரணி, தான் இனி காங்கிரஸில் ஒருபோதும் நீடிக்கப் போவதில்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் என இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் கட்சியில் தனது பிரச்சனை குறித்து டெல்லி காங்கிரஸ் மேலிடமும் கண்டுகொள்ளவில்லை, அதைப் பற்றி கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை என்பதையும் விஜய தாரணி போட்டு உடைத்து இருக்கிறார்.

தமிழகத்தில் காங்கிரசுக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போலவே மேலும் 10 பேர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில்தான் திமுக கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்பி தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆகையால் தற்போது எம்பியாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல்நிலை ஏற்படும் என்பது உறுதி. இதனால் எம்பிக்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

எனவே திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும்போது தங்களுக்கு சீட் கிடைக்காத எம்பிக்கள் சிலரும் பாஜக பக்கம் சாயலாம் என்கிறார்கள்.

குறிப்பாக வடக்கு மற்றும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்கள் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் முதலில் அமைதி காப்பார்கள். பின்னர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் தமிழக காங்கிரஸ் தரப்போ விஜயதாரணி விவகாரத்தை அப்படியே மறுக்கிறது.

“காங்கிரஸ் தேசிய தலைமைக்கு, தமிழக அரசியல் களத்தில் யாரை எப்போது இறக்கி விளையாட வைக்கவேண்டும் என்பது நன்றாகத் தெரியும். இப்போது செல்வப்பெருந்தகை களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார். அடுத்து வேறு ஒரு தலைவர் இறக்கிவிடப்படலாம். விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயதாரணி எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது அவருக்கான செல்வாக்கு என்பதைவிட அது அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள செல்வாக்கு ஆகும். கேரளா அருகே இருப்பதால், விளவங்கோடு தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெறும் அல்லது கம்யூனிஸ்ட் வெற்றி பெறும். எனவே காங்கிரசில் விஜயதாரணிக்கான காலம் வரும் வரை காத்திருப்பது நல்லது” என்கின்றனர்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்ட மறுநாள், செய்தியாளர்கள் அவரிடம் பல்லடத்தில் வருகிற 27ம் தேதி நடைபெற இருக்கும் பாஜக மாநாட்டில் பிரதமர்மோடி கலந்து கொள்ளும்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறதே? என கேள்வி எழுப்பியபோது, அதற்கு செல்வப் பெருந்தகை “அப்படி எதுவும் இல்லை பிப்ரவரி 19ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விஜயதாரணி பங்கேற்பார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விஜயதாரணி இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு செல்வ பெருந்தகை என்ன காரணம் கூறுகிறார் என்றால், “விஜயதாரணி ஒரு வழக்கறிஞர். உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விஷயமாக அவர் கடந்த ஐந்து நாட்களாக டெல்லியில் இருக்கிறார். அதனால்தான் அவர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இதை சாக்காக வைத்து பிள்ளை பிடித்து செல்பவன்போல அவரை பாஜகவில் இழுத்துப் போட முயற்சி நடக்கிறது. அது ஒரு போதும் பலிக்காது” என்று ஆவேசம் காட்டினார்.

இதிலிருந்தே செல்வப் பெருந்தகை இந்த விவகாரத்தில் மழுப்புகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. “விஜய தாரணியை பொறுத்தவரை, காத்துக் கிடந்த காலங்கள் எல்லாம் போதும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.

எனவே அவர் மட்டுமல்ல அதிருப்தி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இன்னும் சில நாட்களிலேயோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்திலேயோ காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்னும் நம்பிக்கையை இவர்கள் முற்றிலும் இழந்துவிட்டதுதான்.

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, வட மாநிலங்களில் 325-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் மோடி ஹாட்ரிக் அடிப்பார் என்ற நம்பிக்கை விஜயதாரணி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பிக்கள் பலரிடம் வலுவாக ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் தற்காலிகமாக மௌனம் காத்தாலும் பாஜகவில் இணைவதற்கு தகுந்த நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமான உண்மை” என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டு இரண்டே நாட்கள் கூட ஆகாத நிலையில் பாஜகவுக்கு தாவ துடிக்கும் தனது கட்சி எம்எல்ஏக்களை அவர் எப்படி தடுக்க போகிறார்?…என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது அவருக்கு மிகப்பெரிய சவாலான பணியாகத் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 442

    0

    0