அரசியலில் காணாமல் போனவர் ஓ.பி.எஸ்… அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை ; கே.பி.முனுசாமி காட்டம்!
Author: Babu Lakshmanan17 November 2023, 11:43 am
பாஜக தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும், அவருக்கு நாவடக்கம் தேவை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோடு பகுதியில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளரிடம் அவர் பேசியதாவது :- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை எவ்வித வரலாறும் தெரியாமல் பேசி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை என காட்டமாக பேசினார்.
ஓ.பன்னீர் செல்வம் குறித்து பேசிய அவர், அரசியலில் அவர் காணாமல் போனவர். அவர் குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும், ஒருவேளை அவர் மன்னிப்பு கடிதம் வழங்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் தலைமை அதனை பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவர் பேசியதாவது:- தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு விலக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவதாகவும், அதற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்பதும், இது அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லாத தன்மை மற்றும் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதை சுட்டிக் காட்டுகிறது என தெரிவித்தார்.
தமிழகத்தில் சமூக விரோத செயல்களுக்கு அடிப்படையாக உள்ள கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால் குற்ற செயல்கள் அதிகரிப்பதோடு, சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார்.