500 மதுக்கடைகள் மூடப்பட்டது நாடகம்… ஜுலை 15ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும்… கிருஷ்ணசாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 June 2023, 4:35 pm

ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் முன்பு பெண்களை முன்வைத்து மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இயங்கி வரும் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக ஆளுநரிடம் கடந்த மாதம் புகார் மனு அளித்துள்ளோம். அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக இயங்கி வரும் பார்கள் தற்போது அதிக அளவு மூடப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு போலியானது. இதில் ஏற்கனவே மூடப்பட்ட சில கடைகளின் பெயர் இருக்கிறது. பள்ளிகள், கோயில்கள் அருகே உள்ள கடைகளும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சில கடைகளும், வருவாய் குறைந்த சில கடைகளும் தான் மூடப்படுகிறது.

தற்போது சில டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் வாங்குவது குறைந்திருக்கிறது. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இதனை எல்லாம் அரசு கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கவில்லை என்றால் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு எதிராகவும், நான் போராட தயாராக இருக்கிறேன்.

சில டாஸ்மாக் கடைகள் மூலம் மொத்தமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. மனம் மகிழ் மன்றங்கள் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதனை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த முயற்சியினை அரசு கைவிட வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். அதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வரும் ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று பெண்களை வைத்து மது கடைகளுக்கு முன்பு மது பாட்டில் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

டாஸ்மாக் கடைகளின் ஒரு லட்சம் கோடி முறைகேடு தொடர்பாக ஆவணங்கள் ஆளுநர் கொடுத்திருக்கிறோம். அதன்மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை வேண்டுமென கூறி இருக்கிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும்.

சினிமா படத்தில் சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும். மாமன்னன் படத்தைப் பார்த்துவிட்டு, அதில் விமர்சனங்கள் இருந்தால் குறிப்பிடுவேன். தற்போது எந்த சினிமா படத்தையும் விமர்சனங்கள் வைக்க தேவையில்லை.

தமிழகத்தில் பூரண விலக்கு அமல்படுத்துவது எனது முக்கிய கொள்கையாக உள்ளது. தற்போது அதைச் சார்ந்த சந்திப்புகளை நடத்தியிருக்கிறோம், என அவர் தெரிவித்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…