திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல… ஜெயக்குமாருக்கு கேஎஸ் அழகிரி பதிலடி…!!
Author: Babu Lakshmanan19 டிசம்பர் 2023, 4:51 மணி
திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி பதிலளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்த பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இந்திய நாடாளுமன்றத்தில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கம் செய்துள்ளார் பிரதமர் மோடி. நாடாளுமன்ற வரலாற்றில் இது போன்ற செயல் நடந்தது கிடையாது. அது விவாதிக்கும் இடம் தான். விவாதிக்க மறுப்பு தெரிவிப்பதால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு 10 நிமிடம் நேரம் கொடுத்து விவாதியுங்கள் என்றால் விவாதிக்க போகிறார்கள்.
பேச தான் நாடாளுமன்றம் செல்கிறோம். பேசவே கூடாது என்று சொல்லுவதற்கு பிரதமர் மோடி யார்? அவர் பத்திரிகைகளை சந்திப்பது இல்லை. கேள்விகளுக்கு பதில் சொல்லுவது இல்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்லுவது இல்லை. உறுப்பினர்கள் கேள்வி பணம் வாங்கி கொண்டு பேசுவதாகவும் பதவி நீக்கம் செய்கின்றனர். இது எவ்ளோ பெரிய கொடுமை. மொய்திரா அம்பானி, அதானி பற்றி பேசினதால் பதவி நீக்கம். செய்யப்பட்டார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர்கள் சர்வாதிகாரியாக மாறி விட்டார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே நாட்டு நலனுக்காக நிதி திரட்ட வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழகத்தில் இருக்கிற நிர்வாகிகள், மக்கள் எல்லாரும் அதற்கு நிதியை வழங்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத நிதியை அதற்கு வழங்க வேண்டும்.
தென் மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவில் சென்று உதவிகளை வழங்கினோம். தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பெய்த மழையை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் மழை வடிகால்கள் கொஞ்சம் இருப்பதால் தண்ணீர் வேகமாக வடிகிறது. எப்படி இருந்தாலும் பாதிப்பு பாதிப்பு தான். வடிகால்களில் வீடு கட்டி உள்ளவர்களை தயக்கம் இல்லாமல் காலி செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டு கொள்கிறேன். நீர்வழி பாததைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
மத்திய குழு தமிழக அரசை பாராட்டி உள்ளது. அவர்கள் அரசியல் வாதிகள் அல்ல அதிகாரிகள். அதனால் பாராட்டி உள்ளனர். ஆனால் பணம் குடுப்பவர்கள் பாஜக. அவர்கள் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு பணம் கொடுப்பார்கள்? முதல்வர் நேரில் சென்று கேட்டால் கூடுதலாக 10 கோடி ரூபாய் கொடுப்பார்கள் தவிர 500, 1000 கோடி ரூபாய் கொடுக்கமாட்டார்கள். தமிழக பாஜக கொடுக்க வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள். தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை. அப்படி இருந்திருந்தால் aims மதுரையில் எப்போதோ வந்திருக்கும். ஆனால் தமிழக அரசை தான் குறை கூறுகிறார்கள்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் பாஜகவினரை தான் அழைத்து செல்கிறார்கள். மக்களை அழைத்து செல்வது இல்லை. பேரிடர் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை செய்வது தவறில்லை. அதற்கான உரிமை உள்ளது. ஆனால் செய்யவேண்டிய வேலையை செய்யாமல் அங்கு சென்று அரசியல் பேசுகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கதவு எப்போதும் திறந்திருக்கும் கூறியது தொடர்பாக பேசிய அவர், திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல.
எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணெய் கலந்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒரு நிறுவனம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க பல லட்சம் கோடி செலவு செய்கிறோம். ஆனால் இவ்வாறு ஒரு நிறுவனம் செய்வது தவறு. அதை இழுத்து மூட வேண்டும். முதலில் அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்க வேண்டும், என்றார்.
0
0