கே எஸ் அழகிரியின் கிடுக்குப்பிடி கேள்வி : அதிர்ச்சியில் உறைந்த திமுக!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2022, 2:12 pm
தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பீட்டர் அல்போன்ஸ், செல்வப்பெருந்தகை தவிர
சிலருக்கு சமீப காலமாக திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறது.
திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட அவ்வப்போது மாநிலத்தில்
நடக்கும் துயர சம்பவங்கள், சிக்கலான பிரச்சினைகளின் மீது ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் அது கட்சிக்கு எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை உருவாக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை மனதுக்குள் இருப்பதை தற்போது வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியை, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டியதாக கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரை குவித்து 150 வீடுகளை இடித்து தள்ளியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவமும் ரொம்பவே உலுக்கி விட்டதுபோல் தெரிகிறது.
ஆக்கிரமிப்பை எதிர்த்து தீக்குளித்த முதியவர்
இந்த நிலையில் புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளை பார்வையிட்ட அழகிரி, தீக்குளித்து உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த பகுதியே போர்க்களம் போல் மாறி உள்ளது. இங்கு 100 அடிக்கு சாலை உள்ளது, அதற்கு அப்பால்தான் வீடுகளே காட்டப்பட்டு இருக்கிறது.
ஆர்.ஏ புரம் சம்பவம் : கேஎஸ் அழகிரி சாடல்
ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், மின் இணைப்பு எவ்வாறு வழங்கப்பட்டது, மாநகராட்சி எவ்வாறு குடிநீர் இணைப்பு வழங்கியது? திடீரென வீடுகளை இடித்தால், அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும்? ஏழை மக்கள் ரத்தம் சிந்தி கட்டிய வீடுகள் சட்டத்தின் பெயரால், இடிக்கப்பட்டால் அதில் என்ன நியாயம் உள்ளது, மனிதாபிமானம் உள்ளது?” என கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினார்.
அதுமட்டுமின்றி “இந்த சம்பவம் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. முதலமைச்சரிடம் இப் பிரச்னையைச் கொண்டு செல்வோம். எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் இது குறித்து சட்டப் பேரவையில் பேசுவார்கள். இப்பகுதியில் வசிக்கும் நலிந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என்றும் அவர் கொந்தளித்தார்.
துணிச்சலாக பேசிய விஜயதரணி
இதேபோல் விஜயதரணி எம்எல்ஏவும், துணிச்சலாக ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இதுதொடர்பாக வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது கட்சி எம்எல்ஏக்களை கடுமையாக விமர்சித்தார்.
“சட்டப்பேரவையில் முதலமைச்சரே கூச்சப்படும் அளவிற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவருக்கு ஜால்ரா அடிக்கின்றனர். எதற்காக தன்னை இப்படி புகழ்கிறார்கள் என்பதெல்லாம் முதலமைச்சருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, இந்த ஜால்ராக்கள் வேண்டாம் என அவரும் பலமுறை கூறிவிட்டார், ஆனாலும் முதலமைச்சரை கஷ்டப்படுத்துவதற்காக இப்படி தொடர்ந்து செயல்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன், ஆனால் இந்த ஜால்ராக்களை அவர் விரும்புவது இல்லை, அது இவர்களுக்கும் புரிவதில்லை,
தாலிக்குத் தங்கம் அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதைவிட, பெண்களுக்கான திட்டம் என்பதால்தான் அதை சட்டப் பேரவையில் ஆதரித்துப் பேசினேன். ‘தாலிக்குத் தங்கம்’ வழங்கும் திட்டத்தில் நானே பலருக்கும் உதவியிருக்கிறேன்.
திமுகவுக்கு ஜால்ரா போடும் காங்., பிரமுகர்கள்
அப்போது அந்தப் பெண்கள் அடையும் மகிழ்ச்சியையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதும் நல்ல திட்டம்தான் என்றாலும், அதனால் அனைத்துப் பெண்களும் பயனடையப்போவதில்லை. தாலிக்குத் தங்கம், உயர் கல்விக்கு உதவித்தொகை இரண்டையும் திமுக அரசு செயல்படுத்த வேண்டும்.
இதுவரை பெண் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படவில்லை. இனியும் அதற்கு வாய்ப்பே இல்லை. அரசியலில் பெண்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஆனால், அதையும் மீறி நாம் நம்முடைய அரசியலைச் செய்யவேண்டியிருக்கிறது” என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.
“இருவரும் ஆளுக்கு ஒரு விதத்தில் உண்மையை பேசி உள்ளனர் “என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
“அதுவும் கே எஸ் அழகிரி, சென்னையில் விளிம்புநிலை மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக முதல்முறையாக மனம் குமுறி திமுக அரசுக்கு எதிராக மறைமுகமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். குறிப்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் என்று தெரிந்தே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பு, குடிநீர் குழாய் வசதிகளை செய்து கொடுத்தார்களா?… அப்படியென்றால் இது யாருடைய குற்றம்? என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் மக்களின் வீடுகள் என்றால் அவர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியபோது யாருடைய ஆட்சி இருந்தது என்ற கேள்வியும் இதில் எழுகிறது.
இதேபோல்தான் விஜயதரணியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதலமைச்சருக்கு ஜால்ரா அடிப்பதை கண்டித்திருக்கிறார். குறிப்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அவர் சூடு வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
திமுக அமைச்சர் காலில் விழுந்த காங்கிரஸ் பிரமுகர்
இப்படி காங்கிரஸ் ஜால்ரா அடிப்பது பற்றி விஜயதரணி கூறியிருக்கும் நேரத்தில்
சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், அமைச்சர் சேகர் பாபுவின் காலில் விழுந்து ஆசி பெறுவது போன்றதொரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சி தமிழக காங்கிரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mr @RahulGandhi I’m Sry but what’s happening to @INCIndia TN? I don’t know the name of this @chennaicorp Councilor representing Congress who Prostrates to A DMK Minister in Chennai.Shameful as ter has to be some basic Principles & Ethics wt any alliance Partners.Reflects TN Cong? pic.twitter.com/3Cz1KtKCLR
— C.Rajashekaran’s Official Account (@irajashekaran) May 9, 2022
ஸ்டாலின் மீது கோபத்தில் காங்கிரஸ் மேலிடம்?
கேஎஸ் அழகிரியும் விஜயதரணியும், வெளிப்படையாக இப்படி விமர்சனம் செய்திருப்பதற்கு டெல்லி மேலிடத்தின் உத்தரவு கூட காரணமாக இருக்கலாம். ஏனென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைத்தான் ஆதரிப்போம், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று திமுக இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடமும், அதை வலியுறுத்தவும் இல்லை.
மாறாக மம்தா, கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் ஆகியோருடன் திமுக தலைவர்கள் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார்கள். இது டெல்லியில் காங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கலாம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள், உண்மையை உடைத்தனர்.