திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் முறைகேடுகள் தொடர்பாக பேசியதாக கூறப்படும் வீடியோக்களும், ஆடியோக்களும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைவலியை தருவதுடன் தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி விடுகிறது.
இது போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், ராஜ கண்ணப்பன் ஆகியோர்தான். அதேநேரம் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் திமுக தொண்டர்களை திட்டிக் கொண்டே அவர்கள் மீது கல் வீசி தாக்கிய ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார்.
எனினும் மற்றவர்கள் சீனியர் அமைச்சர்கள் என்பதால் இதுவரை திமுக தலைமை அவர்கள் மீது எந்த கடும் நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அவர்கள் பொது வெளியில் அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று மட்டும் முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அதேநேரம் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்ட ஒரு ஆடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்திய அரசியலையே ஒரு உலுக்கு உலுக்கியது. அதில் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும், அவருடைய மைத்துனரான அமைச்சர் உதயநிதியும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டு, அதை எப்படி வெள்ளைப் பணமாக்குவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்” என்ற அதிர்ச்சி தகவல் இருந்ததுதான் அதற்கு முக்கிய காரணம்.
அதன்பிறகு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார் என்பது வேறு விஷயம்.
இந்த நிலையில்தான் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்ததெல்லாம் வெறும் ஜூஜூபி என்பதைப் போல தற்போது 60 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்பி ஆகியோர் மீது ஒரு பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைக் கூறி இருப்பவர் யாரோ எவரோ இல்லை, திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த குடியாத்தம் குமரன் என்பவர்தான்.
இவர் கடந்த ஜூலை மாதம் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், பிரபல நடிகைமான விந்தியாவை இழிவு படுத்தும் விதமாக பேசியும் இருந்தார். இதற்காக அவர் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.
இந்த புகாரில் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது. இது தொடர்பாக அதிமுக சட்ட ஆலோசகர் இன்பதுரை அப்போது தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தார்.
இந்த நிலையில்தான், குடியாத்தம் குமரன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதன் காரணமாகவும் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
குடியாத்தம் குமரன் இப்படி திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2019ம் ஆண்டில் ஒருமுறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவர் அமைச்சர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளர் என்பதுதான். அதனால் நடிகை விந்தியாவை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பாகவே குடியாத்தம் குமரன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று முதலில் பரபரப்பு தகவல் வெளியானது.
பின்னர் கடந்த 19ம் தேதி நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து குடியாத்தம் குமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் மோடியை மிகக் கடுமையான முறையில் அவர் சாடியும் இருந்தார். இதன் காரணமாகவும் குடியாத்தம்
குமரன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல உண்மையான காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது. சமீப காலமாகவே அமைச்சர் துரை முருகனுக்கும், குடியாத்தம் குமரனுக்கும் கடுமையான மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக ‘கதிர் ஆனந்த் எம்பி என் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார். துரைமுருகனும் கட்சியிலிருந்து என்னை நீக்கப் பார்க்கிறார். என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று சமூக வலைத்தளத்தில் குமரன் பதிவிட்டிருந்தார். இது திமுகவினர் மத்தியில் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதையடுத்தே அவர் மீது மீண்டும் சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் குடியாத்தம் குமரன் ஆவேசமாக பேசும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “நான் மண்ணுக்குள் போகும் வரை திமுக உடன்பிறப்புதான். செருப்பால் அடித்தாலும் எனது கட்சி திமுகதான். இந்தக் கட்சிக்காகவும், தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்காகவும் என் உயிரையே கொடுப்பேன்.
எனக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கதிர் ஆனந்த்தான் இந்த மாவட்டத்துக்கே பிரச்சனை. சேர்மன் தேர்தலில் திமுகவை எதிர்த்து நின்ற பாமகவுக்கு, ஒரு பெரிய தொகைக்கான டெண்டரை வழங்கியுள்ளார், கதிர் ஆனந்த்.
திமுககாரனுக்கு எதிராகவே கதிர் ஆனந்த் செயல்பட்டு வருகிறார். தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.
மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். அது பற்றிய உண்மைகளை வெளியிடுவேன். அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்பி இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். நான் அவற்றை வெளியிட்டால் அடுத்த 10 நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது” என்று பரபர குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.
இது திமுக தலைமைக்கு மட்டுமல்லாமல் அக்கட்சியின் அமைச்சர்களுக்கும் பலத்த ஷாக் கொடுத்திருக்கிறது. மேலும் இது திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 32 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடத்தி வரும் அதிரடி ரெய்டில் ஒரு லட்சம் யூனிட் மணல் வரை கணக்கில் காட்டப்படாமல் மோசடி செய்யப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது, என்பது தெரிய வந்துள்ளது. இது கனிமவளத்துறையை தன் கைகளில் வைத்திருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படும் நிலையில் அவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிபோல அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் குடியாத்தம் குமரன் விரைவில் வெளியிடப் போவதாக கூறும் இன்னொரு ஆடியோவும் ED அதிகாரிகளுக்கு வலுவான ஆதாரமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“குடியாத்தம் குமரன் மூலம் திமுகவுக்கு, மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி முதலமைச்சர் ஸ்டாலின் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் ஏற்கனவே அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் 30 ஆயிரம் கோடி ரூபாயை சபரீசனும், உதயநிதியும் இந்த ஓராண்டில் சம்பாதித்து விட்டனர் என்று கூறப்பட்ட தகவலின் காரணமாகத்தான் அந்தப் பணம் எங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் என்ற சந்தேகமே அமலாக்கத்துறைக்கு எழுந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு துறையையும் தனது கைவசம் வைத்திருந்ததால் ஏற்கனவே சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை பின்பு அவரை கைதும் செய்தது.
அதேபோன்று மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறைக்கு இப்போது குடியாத்தம் குமரன் மூலம் இன்னொரு துருப்பு சீட்டும் கிடைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
மதுவிலக்கு, நீர்வளத்துறை ஆகியவற்றில் மட்டுமே இரண்டரை ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டல் என்றால் இன்னும் சில துறைகளில் இதைவிட அதிகம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுவதையும் தவிர்க்க முடியாது.
இத்தனைக்கும் துரைமுருகனைப் போலவே, குடியாத்தம் குமரனும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான். தனது மாவட்டத்தில் தன்னை மிஞ்சி யாரும் கட்சியில் உயர்ந்த நிலைக்கு வந்து விடக்கூடாது. எல்லோருமே அவர் சொல்வதைத்தான் கேட்டு நடக்கவேண்டும் என்ற எண்ணம் 55 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள துரைமுருகனுக்கு எப்போதுமே உண்டு என்பார்கள். அதுவும் மகன் கதிர் ஆனந்த்தை வேலூர் தொகுதி எம்பி ஆக்கிய பின்பு குடும்ப அரசியலையும் அவர் வேலூர் மாவட்ட திமுகவுக்குள் தீவிரமாக கொண்டு வந்துவிட்டார்.
அதனால்தான் தந்தையும், மகனும் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் என்ற கோபம் இயல்பாகவே வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் உருவாகிவிட்டது.
இதைத்தொடர்ந்தே அவர்கள் இருவரும் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மணல் கொள்ளை அடித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை குடியாத்தம் குமரன் வைத்திருக்கிறார் என்று கருதுத் தோன்றுகிறது. இன்னும் பல மாவட்டங்களில் சீனியர் அமைச்சர்கள் இப்படித்தான் கட்சிக்காக பல ஆண்டு காலம் உழைத்த தொண்டர்களையும் நிர்வாகிகளையும் முன்னேற விடாமல் தடுக்கிறார்கள் என்ற எண்ணம் திமுகவினரிடம் வலுத்து வருகிறது. இது நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக தலைமைக்கு சிக்கலையே ஏற்படுத்தும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சொந்தக் கட்சியினராலேயே சிக்கலை சந்தித்து வருவதை என்னவென்று சொல்வது எனத் தெரியவில்லை
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.