குமரி ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு.? குறி வைத்த திமுக : முன்னாள் அமைச்சர்கள் இடையே போட்டா போட்டி!!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2022, 10:35 pm
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் தி.மு.கவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி பதவி காலம் அடுத்த மாதம் முடிகிறது .
இதனால் ராஜ்யசபா எம்.பி சீட்டை பெறுவதற்கு தி.மு.க வின் முக்கிய புள்ளிகளுக்கிடையே கடுமையான போட்டா போட்டி எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் இருந்த விஜயகுமாரின் எம்பி பதவிக்காலம் முடிவடைவதால், கன்னியாகுமரி மாவட்டத்திற்கே அந்த ராஜ்யசபா எம்பி சீட் கிடைக்கும் என உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .
அதன்படி, இந்த ராஜ்யசபா எம்.பி சீட் குமரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டால் அது யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் முன்னாள் எம்.பி.,ஆஸ்டினும், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த இருவர் பெயரையும் தான் குமரி மாவட்ட அடிமட்ட திமுக தொண்டர்களும் டீக்கடையில் உச்சரித்து வருகின்றனர். ராஜ்யசபா எம். பி.,சீட் குமரி மாவட்டத்திற்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுமா.?
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குமரி மாவட்டத்தில் திமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட ஆஸ்டின், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ்ராஜன் ஆகியோர் தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
இது திமுக தலைமைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்பதே கூறலாம். இந்த தோல்வியை சரிகட்டவே முதல்வரிடம் பெரிதளவில் இணக்கும் இல்லாமல் இருந்த எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ்க்கு அமைச்சர் பதவி கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது .
ஆனால் தற்போது அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மிக இணக்கமாக உள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின்னர் மாவட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.
கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மேயர் மகேஷும் அவரின் கட்டுப்பாட்டிலேயே வழி நடந்து வருகிறார். குமரி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் நீங்கி, இந்த ஒற்றை தலைமை உருவாக ஓராண்டு ஆகியுள்ளது.
இச்சூழ்நிலையில் குமரி மாவட்டத்திற்கு ராஜ்யசபா எம்.பி.,சீட் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறலாம். ஏனெனில் எந்த அரசியல் கட்சியும் மாவட்டத்திற்குள் கோஷ்டி பூசல் ஏற்படுவதை விரும்புவதில்லை.
இந்த காரணத்திற்காகவே முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகார வரம்பில் இருந்துவந்தார் என்பது குறிப்பிடதக்கது.
இப்படிப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,சீட் வழங்கினால் மாவட்டத்தில் மேலும் ஒரு அதிகாரபலம் ஏற்பட்டு, கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வலுக்கவே வாய்ப்புள்ளது என தெரிகிறது.
அதேபேல் சட்டமன்ற தேர்தலில் ஒருசில மாவட்டங்களில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றும் ,அங்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லாத நிலையும் இருந்து வருகிறது. எனவே அமைச்சர் பதவி இல்லாத மாவட்டத்திற்கே ராஜ்யசபா எம். பி.,சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
இருப்பினும் குமரிமாவட்டத்தில் காலியாகும் இந்த ராஜ்யசபா எம்.பி.,சீட்டை பெற முன்னாள் எம். பி.,ஆஸ்டின் மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரிடையே கடுமையாக முயற்சி நடந்துவருகிறது.