யார் சங்கி? அதிரடி காட்டிய பாஜக : குளிர்காயும் சீமான்!

Author: Udayachandran RadhaKrishnan
21 அக்டோபர் 2024, 7:58 மணி
Seeman
Quick Share

தமிழகத்தில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, திருமாவளவனுக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், குளிர்காயும் வகையில் ‘திருமாவளவனை முதல்வராக்க நான் தயார் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பட்டியலின பிரிவில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2009ல் தி.மு.க., ஆட்சியில், 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் எதிர்த்தனர். சில கட்சிகள் சார்பில், இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட, 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என அங்கீகரித்து, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட்டில் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அருந்தியருக்கான உள்ஒதுக்கீட்டை, தி.மு.க., அரசு கொண்டு வந்ததால், அக்கட்சி கூட்டணியில் உள்ள திருமாவளவன், தற்போது தீவிரமாக எதிர்ப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு பேட்டி ஒன்றில் கூறும்போது: திருமாவளவனை தமிழக முதல்வராக்குவது எங்கள் கனவு, என்றார்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், திருமாவளவனை விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்: சமூக நீதி பற்றிப் பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி பற்றி அம்பேத்கர் கூறியது என்னவென்றால் அணைத்து கடைக்கோடி மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பது தான்.

இதுதான் அம்பேத்கரின் எண்ணமாகவும், கொள்கையாகவும் இருந்தது. ஆனால் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்.

அவரது கட்சி ஒரு சிறியது. அவரை அந்த அமைப்புக்கான தலைவராகத்தான் நான் பார்க்கிறேன்.

அவர் ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவர் என்றால் அவர் அனைத்து தலித் மக்களையும் திருமாவளவன் ஓரே பார்வையில் பார்க்க வேண்டும். எனவே அவரின் உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடியில் உள்ள அனைத்து தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் எண்ணம். அதுதான் அவரின் கோரிக்கை.

அதற்காகத்தான் அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்கின்ற அளவிற்குச் செய்து கொண்டிருப்பது தான் திருமாவளவன் எனத் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசிய இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எல்.முருகன் அருந்ததியர் என்பதையே ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியும். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அருந்ததியர் மக்களின் உரிமைகளுக்காக எந்த இடத்திலும், எந்த நாளிலும் அவர் போராடியது இல்லை.

அதற்காக அவர் குரல் கொடுத்தது இல்லை. அவர் படிக்கும் காலத்திலே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார். அரசியலில் ஈடுபடும் காலத்திலே ஆர்.எஸ்.எஸ்காரராக ஈடுபட்டார். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் தான் இவர் ஒரு அருந்ததியர் என்று அடையாளம் காட்டியது. தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியர்களுக்கும், எல்.முருகனுக்கு எந்த தொடர்பு இல்லை.

தமிழ்த் தாய் வாழ்த்தை எடுத்துவிடுவேன் என்று சீமான் சொல்லவில்லை. அதற்கு பதிலாக இன்னும் சிறப்பான ஒரு தமிழ்த் தாய் வாழ்த்தை நான் நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் இந்த கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

திராவிடம் என்பது மரபினம். தமிழர் என்பது தேசிய இனம். மரபினத்துக்குள்ளேயே இருக்கிற பல்வேறு தேசிய இனங்களில் ஒன்று தமிழினம். அவ்வளவுதான். இதனை நாம் வெவ்வேறாகப் பிரிக்கத் தேவை இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, திராவிடம் என்றால் தமிழ்தான்; திராவிட நாடு என்றால் தமிழ்நாடுதான்; திராவிடத்தைப் பாதுகாப்போம் என்றால் தமிழைப் பாதுகாப்போம்; தமிழர்களைப் பாதுகாப்போம் என்றுதான் பொருள் என கவிதைகளையும் பாடி இருக்கிறார்.

எனவே, அந்தக் காலச் சூழலில் மாநிலங்கள் பிரிக்காத காலத்தில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படாத அந்தக் காலத்தில், மதராஸ் மாகாணம் என்ற போது திராவிட மொழிகள் என்ற அடிப்படையில் தென்னிந்திய மொழிகள் எல்லாம் அடையாளம் கண்டு இந்த பகுதியை திராவிட நிலம் என்று நம்முடைய முன்னோர்கள் அறிந்திருந்தனர்.

அதைவிட ஆரியத்துக்கு எதிரான கோட்பாடு திராவிடம்தான் என்பது பண்டிதர் அயோத்திதாசர் முன்மொழிந்த கோட்பாடு ஆகும். பெரியாருக்கும் திராவிட கட்சிகளுக்கும் முன்னரே, திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். ஆகவே இதை நாம் குழப்பிக் கொள்ள தேவை இல்லை. திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம். இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:, விசிக தலைவர் திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர் எனத் தெரிவித்தார். நான் ஆர்எஸ்எஸ் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு ஏன் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தகவலை கொடுத்தவன் நான். அருந்ததியினர் மக்களுக்கான இட ஒதுக்கீடு எளிதாக கிடைக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த இட ஒதுக்கீடு.

கடைநிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது அந்தியோதயா என்பதன் பொருள். அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. விசிக தலைவர் திருமாவளவன் கடந்த கால தேர்தல் வரலாற்றில் அவரது கட்சி சார்பாக போட்டியிட அருந்ததியினருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாரா .

சனாதானத்தையும் ஆன்மீகத்தையும் நாங்கள் ஆதரிப்போம்,என்று எல்.முருகன் கூறினார். அதேநேரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

அவரது பேட்டியில் கூறியிருப்பதாவது: திருமாவளவனுக்கு முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. அவரை நாங்கள் ஆதரிப்போம். அவரை எப்படியாவது நாங்கள் முதல்வராக்குவோம். இதில், என்னை விட மகிழ்ச்சி அடையும் நபர், வேறு யாரும் இருக்க முடியாது. கனவு பலிக்காது என்று சொல்வதற்கு முருகன் யார்.
அவர் இரண்டு முறை மத்திய அமைச்சராகும் போது, திருமாவளவனால் தமிழக முதல்வராக முடியாதா. இவ்வாறு சீமான் கூறினார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர். என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடு விடுபட்டதால் பற்றிய தீ இன்னும் அடங்கவே இல்லை. கவர்னருக்கு கவசமாக பாஜகவினர் இருந்து வருகின்றனர்.

அதற்குள் பட்டியல் இன பஞ்சாயத்து ஏற்பட்டு ,யார் சங்கி என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீமான் தமிழ் தாய் வாழ்த்து வேண்டாம் என்று சொல்வதற்கு புதிய அர்த்தம் திருமாவளவன் கூறியதால், அவரை கண்ணை மூடிக்கொண்டு முதல்வராக்குவேன் என சீமான் சபதம் செய்து உள்ளார். ஆடு நனைகிறது என்பதற்காக ஓநாய் அழுத கதையாகவே இது உள்ளது.

அருந்தியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், முருகனுக்கும், திருமாவளவனுக்கும் இடையேயான மோதலில், குளிர் காயும் வகையில், சீமான் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளார். சோழியன் குடும்பி. சும்மா ஆடுமா என்பதைப் போல,
இதன் வாயிலாக நாம் தமிழர் கட்சிக்கு, தேவேந்திர குல வேளாளர் மற்றும் பட்டியலின சமுதாயத்தின் ஓட்டுகளை வளைக்க, சீமான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பதாலே தான் இந்த விவகாரத்தில் அடக்கி வாசிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இல்லாவிட்டால் இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு, ரோடு மறியலில் பாய் விரிப்பு என தமிழகமே போராட்டம் கலை கட்டிருக்கும். அருந்ததிய மக்கள் தமிழர் கிடையாது என ஏற்கனவே பேசி பெரும் சர்ச்சையில் சீமான் சிக்கி உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். இந்தக் காயத்துக்கு மருந்து தடவத்தான் சீமான் திருமாவளவணை ஆதரிக்கிறார் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியாமல் இல்லை.

இதற்காக எல்.முருகனைப் பார்த்து ஆர் எஸ் எஸ் சங்கி எனக் கூறியுள்ளார். சங்பரிவார் அமைப்பிலிருந்துதான் நான் வந்தேன் என முருகனும் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் அளித்துள்ளார். உள் ஒதுக்கீடு விவகாரத்தில் வழக்கு தொடுத்து அருந்ததி மக்களின் எதிர்ப்பை வாங்கிக் கொண்ட திருமாவளவன் கையில் இருக்கும் சங்கி விவகாரம் வெற்றி பெறுமா.. இல்லை சங்கி சொங்கியாக மாறுமா என்பது தேர்தல் நேரத்தில்தான் வெளிச்சமாகும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!
  • Views: - 95

    0

    0

    மறுமொழி இடவும்