குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விவகாரம்.. CM ஸ்டாலினின் பழைய வீடியோவை டிரெண்டாக்கும் அதிமுக…!!
Author: Babu Lakshmanan20 March 2023, 9:46 pm
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து பழைய வீடியோவை அதிமுக டிரெண்டாக்கி வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் மிக முக்கியம் வாய்ந்த, இல்லத்தரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்போடு இருந்து மாதம் ரூ.1000 உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பலத்த கரவொலி எழுப்பினர். இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை குறித்து சட்டப்பேரவையில் திமுக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டு, தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் பழைய வீடியோவை அதிமுகவினர் டிரெண்டாக்கி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, எட்டிமடை சண்முகம் பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்ததுடன், “அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூபாய் 1000 வழங்கப்படும் என்பது தானே திமுகவின் தேர்தல் வாக்குறுதி? முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது என்ன தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் 1000 ரூபாய் என்று அறிவிப்பது? அது சரி, மக்களை ஏமாற்றுவதற்கு திமுகவிற்கு சொல்லிக் கொடுக்கணுமா என்ன!?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.