அமைச்சர் பொன்முடி மீதான நிலஅபகரிப்பு வழக்கு… பரபரப்பு தீர்ப்பை அளித்த சிறப்பு நீதிமன்றம்..!!!
Author: Babu Lakshmanan6 July 2023, 11:15 am
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நிலஅபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
இவர், அந்த காலகட்டத்தில் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு, போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக கடந்த 2003ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு உள்பட 10 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, 2004ம் ஆண்டு 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதேவேளையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர் பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, 2007ம் ஆண்டு அவரை இந்த வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, பொன்முடியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து, பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை திமுக உன்னிப்பாக கவனித்து வந்தது.
இந்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
0
0