நிர்வாணப்படுத்தி முகத்தில் சிறுநீரை கழித்து போலீசார் கொடுமைப்படுத்தினாங்க : சட்டக்கல்லூரி மாணவன் பகீர் தகவல்..!!
Author: Babu Lakshmanan22 January 2022, 1:35 pm
சென்னை கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 14ம் தேதி சென்னை கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவரான அப்துல் ரஹும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த போலீசார் அவரை முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்ததுடன், அவர் ஓட்டி வந்த சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதனால், மாணவருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஆய்வாளர் நசீமாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி சென்னை ஓட்டேரியில், உள்ள புலியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் காவல் நிலையத்தில் தாக்கப்படுவது குறித்து வீடியோ காட்சியை போராட்டகாரர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அப்துல் ரஹுமை போலீசார் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தெரியக்கூடாது என்பதற்காக காவல் நிலையித்தில் சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அப்துல் ரஹுமை அடித்து தாக்கியதுடன் அவரது உடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியதாகவும், முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவர் ரஹீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நசீமா உட்பட 9 காவல்துறையினர் மீது IPC 294(b), 323, 324 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாணவரை தாக்கிய விவகாரம் தொடர்பாக உத்திரகுமரன், பூமிநாதன் ஆகிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ரஹும் கூறியதாவது :- காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது முதல் காலை வரையில் என்னை அடித்துக் கொண்டே இருந்தனர். உள்ளாடையோடு தான் என்னை தாக்கினார்கள். பின்னர், என்னை நிர்வாணப்படுத்தி இரவு முழுவதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியனர். என்னை நிர்வாணப்படுத்திய போதே நான் இறந்துவிட்டேன். பீரோவில் முட்டி தாக்கியதில் தையல் போடும் அளவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. எனது முகத்தில் காவல்துறையினர் சிறுநீர் கழித்தனர், எனக் கூறினார்.
தமிழகத்தில் போலீசார் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வெளியாகி வரும் நிலையில், போலீஸ் கஸ்டடியில் சட்டக்கல்லூரி மாணவன் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.