சர்ச்சையை கிளப்பிய லியோ பட போஸ்டர்…? அன்று சொன்னது என்ன ஆச்சு..? வழக்கம் போல நடிகர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!!
Author: Babu Lakshmanan17 June 2023, 8:30 am
லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியான நிலையில், அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவான நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் தற்போது வரை அடுத்த அப்டேட் என்ன..? என்ன..? என்று ரசிகர்கள் பெரிதும் கேள்வியை எழுப்பி, ஒவ்வொரு அப்டேட்டுகளையும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், விஜய்யின் பிறந்த நாளன்று லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் போஸ்டரை வெளியிட்டு அறிவித்தார். அந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போல் இருந்ததால் உடனடியாக அந்த போஸ்ட்டரை நீக்கினார்கள்.
தற்போது லியோ படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், புகைப்பிடிக்கும் போஸ்டருக்கு வழக்கம் போல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர்.
அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.