பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டுவோம்.. ஜெயிப்பது மத அரசியலா? மனித அரசியலா? ஒரு கைப்பார்க்கலாம் : உதயநிதி அறிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan23 January 2024, 11:59 am
பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டுவோம்.. ஜெயிப்பது மத அரசியலா? மனித அரசியலா? ஒரு கைப்பார்க்கலாம் : உதயநிதி அறிக்கை!
திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்க அறிக்கையில், இந்திய ஒன்றியத்தில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், நம் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம். மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற நம் மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள் – இளைஞரணி நிர்வாகிகள் -வருகை தந்து சிறப்பித்த லட்சோப லட்சம் இளைஞரணி தம்பிமார்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கமாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாநாட்டினை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை நம் தி.மு.கழக இளைஞர் அணிக்கு மாநாடு நடத்துகிற வாய்ப்பை நம் கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்தார்கள். 2007 ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டிய நம் முதலமைச்சர் அவர்கள், 2024-ல் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் – உற்சாகத்தையும் தந்தார்கள். கழகத் தலைவர் நம் முதலமைச்சர் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் தொடங்கி – அனைவருக்கும் உணவு பரிமாறுதல் வரை அனைத்தையும் திட்டமிட்டு Zero Food Waste’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு நேர்த்தியாக மாநாட்டின் ஏற்பாட்டுகளை அண்ணன் அவர்கள் செய்திருந்தார்கள். இந்த ஏற்பாடுகள், மாநாடு என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணமே வகுத்திருக்கின்றன. இந்த மாநாட்டினை தங்கள் வீட்டு நிகழ்ச்சி என்ற உணர்வோடு ஒட்டுமொத்த சேலம் மாவட்டக் கழகத்தினரும் களத்தில் இறங்கி மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தார்கள்.
சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாடு, நம் இயக்கத்துக்கான மாநாடு மட்டுமல்ல. இந்தியாவுக்கான மாநாடு என்பதை உணர்ந்து, மாநாட்டின் வெற்றிக்காக தமிழ்நாடெங்கும் பயணித்தோம். இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டங்களின் வாயிலாக மாநாட்டுக்கு வருமாறு அனைவரையும் நேரடியாக அழைத்தோம். அந்தக் கூட்டங்களே ஒரு மினி மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் விதமான எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுவார்கள். ஒரு ஆனால், இந்த மாநாடு அந்த எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு காத்து மாநாட்டின் வெற்றிக்கு ஒத்துழைத்த இளைஞர் அணியின் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாநாட்டுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகளே, மாநாட்டின் வெற்றியை முன்னறிவிப்பு செய்கின்ற வகையில் நடைபெற்றன. நமது மாநாடு இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு நமது கழக நிர்வாகிகளும் இளைஞரணி நிர்வாகிகளும் மாநாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தது தான் முக்கிய காரணம்.
நேற்று வரை நமது மாநாடு தான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் மாநாடு பெற்ற பிரம்மாண்ட வெற்றியின் விளைவு, நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் பெறப்போகிற மாபெரும் வெற்றி எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது இதுவரை உழைத்துவிட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல் – ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும். நமது மாநாட்டின் நோக்கம் “மாநில உரிமை மீட்பு”. அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும்.
இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் அவர்களுக்கு ஆமாம் சாமி போடும் அடிமைகளையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது. மத அரசியலா – மனித அரசியலா? மனு நீதியா – சமூக நீதியா? மாநில உரிமையா? – பாசிச அடக்குமுறையா? என ஒரு கைபார்த்துவிடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது.
இந்த மாநாட்டில் கூடியிருக்கும் உங்களையெல்லாம் பார்க்கும் போது நான் லட்சம் இளைஞர்களின் சக்தியை பெறுகிறேன். இங்கே உதயநிதி மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் என்னுடைய மகன் தான். திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு தான்,” என்று சொன்னார்களே, முதலமைச்சர் ஸ்டாலின், லட்சம் இளைஞர்களின் சக்தியை நமது தலைவர் அவர்கள் பெற்றுவிட்டார்கள். அவரின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். தேர்தல் களத்தில் உழைப்போம்! மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்டுகளுக்கு முடிவுகட்டி அடிமைகளை புறந்தள்ளி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் அவர்களின் கரங்களில் சேர்ப்போம் என உதயநிதி தெரிவித்துள்ளார்.