அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பதில் கடிதம்!!
Author: Udayachandran RadhaKrishnan6 February 2024, 7:50 pm
அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பதில் கடிதம்!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய மூன்று பக்க கடிதத்தில் மத்திய அரசு சில அரசியலமைப்புச் சட்டத்தின் 293-வது பிரிவின் கீழ் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, மாநிலங்கள் கடன் பெறும் இடத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது X தளத்தில், “மாண்புமிகு தோழர் பினராயி விஜயன் அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜீவ் அவர்கள் என்னிடம் அளித்திருந்தார்.
அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன்.
மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெற்கில் நாம், தோழர் பினராயி விஜயன் அவர்கள், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி மம்தா அவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள் தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்!
கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது! உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது.
நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது!” என அவர் பதிவிட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்த ஆதரவிற்கு கேரள முதலமைச்சரான பினராயி விஜயன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, டெல்லியில் கேரளா நடத்த உள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சல்யூட் என்றும், ஜனநாயகம், அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் என்றும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.