ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம்… சீட் தரக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகியின் பகீர் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 8:48 pm

ஜோதிமணிக்கு எதிராக ரத்தத்தில் கடிதம்… சீட் தரக்கூடாது என காங்கிரஸ் நிர்வாகியின் பகீர் எதிர்ப்பு!!

கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என அம்மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சி.சேகர் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் தற்போதைய, முன்னாள் நிர்வாகிகள் பலர் பேசினர். அவர்கள் அனைவரும் ‘கூட்டணியில் கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தரவேண்டும். தற்போதைய எம்.பி. ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனிடம் க.பரமத்தி வட்டார துணை தலைவர் விசுவை ஆர்.செந்தில் குமார் அவரது ரத்தத்தில் எழுதிய கடிதத்தை வழங்கினார்.
அதில் ‘கரூர் எம்.பி தொகுதியை கூட்டணியில் மீண்டும் காங்கிரஸுக்கு பெற்றுத் தரவேண்டும். எம்.பி ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்’ என எழுதியிருந்தார்.

இக்கடிதம் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என பேங்க் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜோதிமணிக்கு வழங்க வேண்டாம் என தமிழக தலைமையை கேட்டுக் கொள்வது, எம்.பி. ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவர், கட்சி நிர்வாகிகளிடம் மோதல் போக்கை கடைபிடிப்பதை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி