ஓபிஎஸ் கடிதத்தை நிராகரித்த இபிஎஸ்..? உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலைக்கு சிக்கல்.. உடனே அதிரடி முடிவை எடுத்த அதிமுகவினர்..!!
Author: Babu Lakshmanan30 June 2022, 11:44 am
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்று கட்சியின் 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 2,400க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.
ஆனால், ஒற்றை தலைமை ஆகாது என்றும், அதிமுகவுக்கு இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்காக, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடமும் மனுக்களை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான FORM A மற்றும் B படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்து இடாததால், அவர்களுக்கு அதிமுக சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், அதிமுக வேட்பாளர்களுக்கான படிவங்களில் இன்று மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் தலைதூக்கியுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதேவேளையில், உள்ளாட்சி தேர்தலையும் விட முடியாத நிலையில், சுயேட்சையாக போட்டியிட அதிமுகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால், மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.