‘அந்த 2 மேயர் சீட் எங்களுக்குதா வேணும்’… திமுகவிடம் அடம்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்.. மறுபக்கம் நெருக்கும் காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 2:29 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்தி முடிக்க திமுக அரசு முடிவு செய்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, தேர்தலை நடத்தி முடிக்க முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.,19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள், இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்களை சந்தித்து இடஒதுக்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியதாவது :- தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 தினங்களில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கேட்ட இடங்களை தருவது பற்றி பரிசீலிப்பதாக தி.மு.க. தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் வார்டுகளை கேட்போம். வெற்றிவாய்ப்புள்ள இடங்களைக் கேட்டுப்பெறுமாறு மாவட்ட நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம், என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் 31ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் கட்டளைக்கு பணிந்து குறைந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டிருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிடவும், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், கடலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, சென்னையில் அண்ணா நகர், வில்லிவாக்கம், எழும்பூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட வார்டுகளை பெற கம்யூனிஸ்ட் கட்சியினர் முனைப்பு காட்டுவதாக சொல்லப்படுகிறது. கும்பகோணம், திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோருவதாகவும் கூறப்படுகிறது. 2006-11ம் ஆண்டுகளில் சிதம்பரம், கோவில்பட்டி, சிவகங்கை நகராட்சிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3105

    0

    0