உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும் : தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்

Author: Babu Lakshmanan
21 February 2022, 5:01 pm

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பத்தாண்டுகளாகப் படு பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் உலர்ந்து காய்ந்துபோன வேர்களுக்கு வேண்டும் நீர் வார்த்து, மீண்டும் துளிர்த்து வளர்ந்து செழிக்கச் செய்யும் வகையில், தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, முழுமையாக நடத்தி முடித்திருக்கிறோம்.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு பெரிதும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருந்தாலும், அதுகுறித்து சட்டரீதியாக உரிய நடவடிக்கையும், தேவையான இடங்களில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.

எந்த வகையிலும் வாக்காளர்களுக்கு இடர்பாடு நேர்ந்திடாத வண்ணம் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 61% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு சில இடங்களில் 70%-க்கு மேல் வாக்குப்பதிவும், ஒரு சில இடங்களில் 50%-க்குக் கீழ் வாக்குப்பதிவும் நடைபெற்றிருப்பதை மாநிலத் தேர்தல் ஆணையம், புள்ளிவிவரங்களுடன் விரிவாக வெளியிட்டுள்ளது.

“உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி – நம்ம ஆட்சி” என்பதே நமது தி.மு.கழகத்தின் இலட்சியமும் நோக்கமும் ஆகும். அதற்கேற்ற வகையில், தேர்தல் களத்தை எதிர்கொண்டோம். கடந்த 9 மாதங்களில், நாட்டு மக்களுக்காக நிறைவேற்றிய முக்கியமான சாதனைகளை மட்டும் முன்வைத்து தி.மு.கழகம் வாக்கு கேட்டது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், கழக அரசு மீது நாளுக்கு நாள் வளர்ந்து பெருகி வரும் நம்பிக்கையேதான் நம் பலம்.

தமிழ்நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய முந்தைய ஆட்சியாளர்களாலும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளாலும், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் பரப்புரை என்ற போர்வையில், அவதூறுகளை அள்ளித் தெளித்தார்கள். பொய்களைக் கட்டவிழ்த்துப் பூச்சாண்டி காட்டினார்கள். தேர்தலின்போது தி.மு.கழகம் அளித்த வாக்குறுதிகளைகளை நிறைவேற்றவில்லை எனக் கட்டுக்கதைகளை அளந்தார்கள். எல்லாவற்றுக்கும் உரிய ஆதாரத்துடன் பதில்களை அடுக்கி, தி.மு.கழகம் பரப்புரை செய்தது. மக்களின் பேராதரவைத் திரட்டியது.

நம் மீது அவர்கள் பரப்பிய அவதூறுகள் மக்களிடம் சிறிதும் எடுபடவில்லை என்றதும், வேறு எந்த வகையிலாவது திசைதிருப்ப முடியுமா என சதித் திட்டமிட்டனர். “முதலமைச்சர் ஏன் நேரடியாகப் பரப்புரை செய்யவில்லை; மக்களை சந்திக்கத் தயங்குகிறாரா?” என்று வேண்டுமென்றே திசை திருப்பிட முயன்றனர். அதிலும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பன்னீர்செல்வமும் அவர்களுக்குள் நடக்கும் பதவிப் போட்டியில், என் மீது பாய்ந்து கொண்டிருந்தார்கள்.

இன்று ஓர் ஆங்கில நாளிதழில்கூட, பழனிசாமியின் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைப் பாணி பற்றி செயற்கையாகவும், உள்நோக்கத்துடனும் வியந்தோதி கட்டுரை வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் நேரடிப் பரப்புரை செய்யவில்லை என்கிற பழனிசாமியின் சொற்கள்தான் அந்த செய்திக் கட்டுரையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

உங்களில் ஒருவனான நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன்; மக்களின் நம்பிக்கையைப் பெற்றவன். வாக்குக்காக மட்டும் மக்களை ஓடோடி வந்து சந்திப்பதில்லை. ஊர்ந்து, தவழ்ந்து, தன்மானத்தை அடகு வைத்து, முதலமைச்சரானவன் அல்ல; மக்களின் நேரடி அங்கீகாரம் பெற்று, அவர்களின் பேராதரவுடன் முதலமைச்சர் என்கிற பொறுப்பை ஏற்றிருக்கிறேன். அந்தப் பொறுப்பை உணர்ந்து கொரோனா பேரிடர் நேரத்திலும், மழை-வெள்ள பாதிப்புகளிலும் மக்களின் துயர் துடைக்க, பகல்-இரவு பாராமல் மக்கள் பக்கம் நின்றேன். மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவையை உடனுக்குடன் நிறைவேற்றினேன். நேற்றும் மக்களைச் சந்தித்தேன்; நாளையும் மக்களைச் சந்திப்பேன்; எல்லாக் கட்டங்களிலும் மக்களோடு இணைந்தும் பிணைந்தும் இருப்பேன்.

என்னைப் பற்றி விமர்சனம் செய்யும் பழனிசாமி எப்படிப்பட்டவர்? தனது ஆட்சியில், காவல்துறையை ஏவி, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, பொதுமக்களைக் கொன்றுகுவித்துவிட்டு, “டி.வி. பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று இதயமும் இரக்கமும் இல்லாமல், ஏதோ சர்வாதிகார சாகசக்காரரைப்போல, கொக்கரித்தவர்தான் பழனிசாமி என்பதை மக்கள் மறந்துவிடவில்லை. கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி, ஏனைய சில மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், துயரத்தில் மிதந்த அந்த மக்களை நேரில் சந்திக்காமல், ஹெலிகாப்டரில் வானத்தில் வட்டமிட்டு வலம் வந்தவர்கள்தான் என்னைப் பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிற பழனிசாமியும் பன்னீர்செல்வமும் என்பதைப் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள்.

தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்திருக்கிற நான், அந்த மக்களின் துயரத்தில் உற்ற துணையாக நிற்கிறேன்; ஆதரவுக் கரம் நீட்டுகிறேன். அதே நேரத்தில், பொதுமக்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு வந்து, கொரோனோ பாதிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதற்காக, அவர்களின் பாதுகாப்பு கருதி, தேர்தல் பரப்புரையைக் காணொலி வாயிலாக ஒவ்வொரு நாளும் மேற்கொண்டேன். அரசு விதித்துள்ள விதிமுறைகளை முதலமைச்சர் என்ற முறையில் கடைப்பிடிக்க வேண்டிய கடமையை உணர்ந்தும், மக்களின் நலன் கருதியும் காணொலி வாயிலாக அவர்களைச் சந்தித்தேன். வாக்குக்காகவும் பதவிக்காகவும் மட்டுமே மக்களை சந்திக்க வந்தவர்கள், என்னை நோக்கி விமர்சனம் செய்வது, மல்லாந்து படுத்துக் கொண்டு துப்புகிற செயலாகும்.

இவர்களின் ஆட்சிக்கால அவலங்களைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதாலும், மக்களின் ஆதரவு இனி எந்நாளும் கிடைக்கப் போவதில்லை என்பதாலும் விரக்தியில் விமர்சனம் செய்து, பத்திரிகை – ஊடகத்தின் வாயிலாக ஊதிப் பெருக்க நினைத்ததைப் புரிந்து கொண்டு, பொதுமக்கள் முறியடித்திருக்கிறார்கள். கோவைக்குத் துணை ராணுவத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பழனிசாமி கூக்குரல் எழுப்பினார். அங்கே அமளிதுமளி செய்ததே, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வேலுமணி என்னும் ஊழல்மணியும், அவருடன் வந்த அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களும்தான். காவல்துறை பொறுமை காத்து, அ.தி.மு.க.வினர் மீது சட்டப்படி எடுத்த நடவடிக்கையால், கோவை அமைதியானது. தேர்தலில் எந்த வன்முறையும் இன்றி வாக்குப்பதிவு நடைபெற்றது. அ.தி.மு.க.வின் தோல்வி உறுதி என்பதால், அவர்கள் போட்ட கபட நாடகங்கள் அனைத்திலும் ஒப்பனைகள் கலைந்து, உண்மை முகம் ஊருக்கு வெளிப்பட்டு விட்டது.

தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அரசியல் யுத்தமாகக் கருதவில்லை. ஆட்சிமீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவே கருதிக் களம் கண்டது. தி.மு.கழக வேட்பாளர்களும், கழகத்திற்காகப் பரப்புரை செய்த நிர்வாகிகளும், நமது அரசின் சாதனைகளையே முன்னிறுத்தினார்கள். வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்கள். புதுமையான முறையில் – மக்களின் மனதில் பதிகிற வகையில் – நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் பரப்புரைகளை மேற்கொண்டார்கள். வாக்கு சேகரிக்கும்போதே கழகத்தின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் களம் அமைந்துவிட்டதால், எதிர்க்கட்சியினர் தங்களின் படுதோல்வியை மறைப்பதற்கு அவதூறுகளை – பொய்ப் பரப்புரைகளை அள்ளிவிட்டனர். வாக்குப்பதிவு நாளன்றும் அதையே மேற்கொண்டனர். அதற்கு கழகத்தினர் யாரும் உணர்ச்சி மேலீட்டால் எதிர்வினையாற்றிவிடக் கூடாது என்பதில் கழகத் தலைமை கவனத்துடன் செயல்பட்டது.

வாக்குப்பதிவின்போது ஏற்படக்கூடிய சிக்கல்கள், தாமதங்கள், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு உருவாக்கும் தகராறுகள் இவை குறித்து, கழகத்தினர் உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் “war room” என்கிற கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உடன்பிறப்புகள் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலத் தேர்தல் ஆணையம், காவல்துறையினர் எனத் தொடர்புடைய இடங்களுக்குத் தகவலைத் தெரிவித்து, முறைப்படியான சட்டப்படியான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கழகத்தினர் யாரேனும், எங்கேனும் ஓரிரு இடங்களில் சற்று அத்துமீறிச் செயல்படுகிறார்கள் என்ற செய்தி வந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் எதிர்க்கட்சியினர் எல்லை மீறிச் சென்றதை பத்திரிகைகள் – தொலைக்காட்சி ஊடகங்கள் – சமூக வலைத்தளங்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை. முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.

சட்டம் தன் கடமையைச் செய்யும். கழகத்தினர் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் நிறைந்திருக்கின்றன. மக்களின் தீர்ப்பு தி.மு.கழகத்திற்குச் சாதகமாகவே அமையும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனினும், அது முறைப்படி அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியது நம் கடமை. நாளை (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நிறைவடையும்வரை கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி அறிவிக்கப்பட்டு, அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான கழக முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளின் வாக்குகளும் முழுமையாக எண்ணப்பட்டு, அனைவருக்கும் முறைப்படி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான். இரண்டாம் முறையாகச் சென்னை மக்கள் என்னை மேயராகத் தேர்ந்தெடுத்த நிலையில், என் வெற்றியைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, பயங்கரமான ஆயுதங்களுடன் அராஜகப் பேயாட்டம் போட்டவர்கள் அவர்கள். அதே வழியை அவர்கள் இப்போது கையாண்டாலும் நாம் அமைதி வழியையே கையாள வேண்டும். என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனத் தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளுக்கும் நான் பயணம் மேற்கொண்டு மக்களுடன் உரையாடியபோது, அவர்களில் பலரும் தெரிவித்தது, கடந்த பத்தாண்டு காலமாக உள்ளாட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிக் கிடப்பதால், அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் உள்ளாட்சி ஜனநாயகம் மலரும் என்ற நல்ல நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர். மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக நிறைவேற்றவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

கடைசி கிராமம் வரை, கடைசி வீடு வரை, நமது அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டியவர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான். கடைக்கோடி மனிதரும் ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாறிட வேண்டும்; இன்பம் பெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய ஆழ்ந்த எண்ணம். வெற்றி உறுதி; அதைவிட கடமையும் பொறுப்பும் நமக்கு மிகுதியாக இருக்கிறது. வெற்றிக் கொண்டாட்டங்களைக் குறைத்து, மக்கள் பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய கட்டாயமான இடத்தில் நாம் இருக்கிறோம்.

வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களைக் கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.

தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கழகத் தலைமையால் அறிவிக்கப்படுகிறவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டியதும் கழக நிர்வாகிகளின் கடமை. தோழமைக் கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் கட்டுப்பாடான முறையில் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் கழகத்தினரின் பொறுப்பு. அதில் எள்முனையளவுகூட பாதிப்பு இருக்கக்கூடாது.

மனதில் கொள்ளுங்கள்! மக்கள் உறுதியாக நம் பக்கம். அவர்களின் சிதையாத நம்பிக்கைக்குரியவர்கள் நாம். நாளை விடியும்! உதயசூரியன் உலா வரும்! உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Chennai International Film Festival 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா : விருதுகளை தட்டி சென்ற தமிழ் படங்கள் லிஸ்ட்..!
  • Views: - 1331

    0

    0