சென்னை, கோவை உள்பட 21 மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு : 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்பு
Author: Babu Lakshmanan2 March 2022, 11:07 am
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது.
12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்த இடங்களில் 4 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல நகராட்சி வார்டுகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 18 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். பேரூராட்சியில் மொத்தம் உள்ள 7,621 பதவிகளுக்கு 196 இடங்கள் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்த வருகிறார்.
கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகள் 96 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. மூன்று வார்டுகளில் அதிமுக.,வும் ஒரு வார்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் வெற்றி பெற்றன. இதனிடையே வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். வார்டு 1ல் இருந்து வரிசையாக நூறு வார்டுகளுக்குமான உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.