பாஜகவுக்கு நயினார்…? காங்கிரசுக்கு ஜோதிமணியா..? நகர்ப்புற தேர்தல்… அதிமுகவைத் தொடர்ந்து திமுகவின் பலே திட்டம்..?

Author: Babu Lakshmanan
31 January 2022, 8:29 pm
Quick Share

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிஸியாக இருந்து வருகின்றன.

அதிமுகவைப் பொறுத்தவரையில் இடப்பங்கீடு சற்று தலைவலியாகத்தான் இருந்தது. மத்திய அரசின் நெருக்கடி, கூட்டணி கட்சிகளை அனுசரித்து போக வேண்டிய கட்டாயம் உள்ளிட்டவற்றால் சற்று தடுமாறியது. பாஜக – அதிமுக கட்சிகளிடையே இடப்பங்கீடு குறித்து பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 10%க்கும் குறைவான இடங்களை வழங்கியதால் அதிமுகவுடன் கூட்டணியை தொடர முடியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai - Updatenews360

இதனிடையே, அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்மையில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதும் ஒரு காரணம் என்றும், அதனை மனதில் வைத்தே அதிமுக பாஜவுக்கு போதிய இடங்களை ஒதுக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதனை இருகட்சியினரும் மறுத்து வருகின்றனர்.

அதேவேளையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலாகும். இது திமுகவின் தன்மானப் பிரச்சனையாகவே உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கு அதிகமான இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருப்பதால், கொடுப்பதை பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் நிலையில் கூட்டணி கட்சிகள் உள்ளன. எனவே, இழுபறியாக இருந்தாலும், பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட திமுக முடித்து விட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சிதான் இதுவரையில் இடப்பங்கீட்டை உறுதி செய்யவில்லை. காரணம், ஒற்றை இலக்கு சதவீதம் கொண்ட எண்ணிக்கையிலான இடங்களை மட்டுமே திமுக ஒதுக்குவதுதான் என்று கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு பெருவாரியான இடங்களை ஒதுக்கிய நிலையில், குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது. எனவே, அது முதல் காங்கிரஸ் கட்சிக்கான மவுசு திமுகவிடம் குறைந்து போய்விட்டதாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தல் வரும் போதெல்லாம் திமுகவிடம் மன்றாடியே இடங்களைப் பெற வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டது. இதனை கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, அக்கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரியே போட்டு உடைத்து விட்டார்.

திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியை பாரமாகவே பார்த்து வருவதாகவும், ஆனால், ராகுல் காந்தி, சோனியா காந்திக்காகவே திமுக எந்த முடிவையும் எடுக்காமல் சகித்துக் கொண்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதால், பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கும் பிரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது திமுகவுக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதிமுகவைப் போன்று காங்கிரஸை கழற்றி விட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, கரூரில் ஜோதிமணியை திமுகவினர் வேண்டுமென்றே அவமதித்து, அலுவலகத்தில் இருந்து விரட்டியடித்தாகவும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுக்கும் பட்சத்தில், பாஜகவைப் போலவே, கூட்டணியில் இருந்து காங்கிரஸை தற்காலிகமாக கழற்றிவிட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, ஜோதிமணியுடனான தகராறுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை என்றும், காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Stalin Meet KS Alagiri- updatenews360

கூட்டணி மற்றும் இடப்பங்கீடு தொடர்பாக ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அக்கட்சி குறித்து அமைச்சரே இதுபோன்று வெளிப்படையாக பேசுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடனான பாஜக கூட்டணி முறிவுக்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்து வருவதைப் போல, திமுகவுடனான கூட்டணி முறிவுக்கு ஜோதிமணி பலிகடா ஆகிவிடுவாரோ..? என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 2164

    0

    0