திமுகவுடன் ஓபிஎஸ்-க்கு ரகசிய தொடர்பு… அப்பறம் எப்படி வசந்த காலம் பிறக்கும்… எங்களுக்கு எப்போதுமே எடப்பாடியார்தான் : ராஜன் செல்லப்பா!!
Author: Babu Lakshmanan18 August 2022, 4:08 pm
மதுரை : எடப்பாடி பழனிசாமியை அழைக்க ஓபிஎஸ்க்கு எந்த தகுதியும் கிடையாது என்றும், திமுகவுடன் தொடர்புள்ள ஓபிஎஸ்ஸிடம் கசப்பை மறந்து எப்படி ஒன்று சேர முடியும் வி.வி ராஜன் செல்லப்பா கடுமையாக பேசியுள்ளார்.
அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்,வி.வி. ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கனவே வழங்கி விட்டனர். அது மட்டும் அல்ல, எடப்பாடியாருக்கு பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும், 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் அதிக மெஜாரிட்டியாக எடப்பாடியாரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று தேர்வு செய்தனர். சிலர் இடைக்கால தீர்ப்பை பெற்று சில அறிக்கையை விடுகின்றனர். இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை. மேல்முறையீடு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்த தீர்ப்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் தான், உயர்ந்து குழு என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
கசப்பை மறக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார், ஆனால் திமுக தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? இனி வசந்த காலம் என்கிறார் ஒபிஎஸ், திமுகவில் தொடர்பு உள்ளவர்களை எப்படி வசந்த காலம் என்று ஏற்கமுடியும்.
ஒபிஎஸ்-ஐ இதுவரையும் யாரும் ஆதரிக்கிறோம் என்று சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் உள்ளது. மிகச்சிறந்த தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது. திமுகவை எதிர்க்கக்கூடிய தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது.
எடப்படியார் புரட்சித்தலைவி அம்மாவால் அடையாளம் கண்டு 1989ஆண்டு சேவல் சின்னத்தில் போட்டியிட்டார், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர், இப்படி பல்வேறு பதவிகள் பெற்று, தன் உழைப்பால் உயர்ந்தார். எந்த தவறும் செய்யாதவர். புரட்சித்தலைவி அம்மா எங்களுக்கு எடப்பாடியாரை மறைமுகமாக அடையாளம் காட்டினார்கள்.
தீர்ப்பை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி வளர்க்க முடியாது. நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்கள் மூலம் இறுதியான தீர்ப்பை பெறலாம். நீதிமன்றம் கட்சிகளை நடத்த முடியாது. கட்சி விவகாரங்களை தலையிடாது என்பது நாடறிந்த உண்மை.
ஓபிஎஸ் எடப்பாடியாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை. அவர் அழைத்தது தவறு. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால் நாங்கள் திமுகவை எதிர்க்கிறோம். நாங்கள் எப்படி ஒன்று சேர முடியும்.
கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டது. யாரும் கூட்டுத் தலைமையை விரும்பவில்லை. இரட்டை தலைமையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை.
ஓபிஎஸ் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. தோல்விதான் பெறுவார், திமுக தற்போது 15 சதவீதம் தாழ்வை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் எடப்பாடியாருக்கு தேர்தல் காலங்களில் தன்னிச்சையாக வெற்றி பெற வாய்ப்புள்ளது.
எப்பொழுது எல்லாம் தீர்ப்பு தனக்கு சாதகமாக வருகிறதோ, அப்போது எல்லம் தென் மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் வருகிறார். இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. தென் மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு தனி செல்வாக்கு என்பது கிடையாது.
இலங்கைக்கு 50 லட்ச ரூபாய் நிதி வழங்குகிறார். அதை தமிழ்நாடு அரசின் மூலம் வழங்குகிறார். கட்சி சார்பாக அவர் கொடுக்கவில்லை. கட்சியிடம் அவர் அனுமதி பெறவில்லை. ஜானகி அம்மாள் புரட்சித்தலைவி அம்மாவிடம் கட்சியை விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் ஓபிஎஸ் அப்படி இல்ல. பசுந்தோல் போர்த்திய புலி. ஒபிஎஸ்ஸிடம் நாங்கள் ஒன்று சேர வழியில்லை.
தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கழக தொண்டர்களும், மக்களும் எடப்பாடியார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஏனென்றால் தென்பகுதிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மக்கள் கேட்காமலே வழங்கியவர். அதனால்தான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஜாதி மதம் அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரராக எடப்பாடியார் உள்ளார். நிச்சயம் வெற்றி பெற்று இந்த இயக்கத்தில் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியார் வருவார். எங்களின் தலைமையாக திகழும் எடப்பாடியார் கட்டளை ஏற்று, தொடர்ந்து கழகப் பணியில் நாங்கள் செயல்படுவோம், என்று கூறினார்.