மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி ; தமிழக அரசு உத்தரவு
Author: Babu Lakshmanan21 May 2024, 8:55 am
மதுரை ; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாத வா்கில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். இதன்பிறகு, நீண்டகாலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் டெண்டர் எல்&டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின.
மேலும் படிக்க: கடைக்குள் புகுந்து அத்துமீறல்… வியாபாரியின் தலையில் அரிவாளால் வெட்டிய கும்பல் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
நீண்ட காலம் கழித்து கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்பித்தது.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கடந்த 10 ஆம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை வழங்கியது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு அரசு நேற்று வழங்கியது.