அம்மா உணவகத்தில் ‘ஆம்லேட்’… அனுமதியில்லாத உணவுகள் அமோக விற்பனை… திமுக கவுன்சிலரின் அடாவடி.. பொதுமக்கள் வேதனை…!!

Author: Babu Lakshmanan
24 May 2022, 12:51 pm

மதுரை அம்மா உணவகத்தில் திமுக கவுன்சிலரின் தலையீட்டால், அனுமதியில்லாத உணவுகளை விற்பனை செய்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை, எளியோரின் பசியை போக்க, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆளும் திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போலவே, பல்வேறு நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும், பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு, அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை உள்ள 10 அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முன்னுதாரணமாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் 5 ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லேட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.

அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும், நாள்தோறும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், இந்த உணவுகளை தயாரிப்பதற்காக ரேசன் கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு , உளுந்து, ரவை போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் , ரேசன் அரிசி பொருட்கள் அம்மா உணவகத்திற்கு எப்படி வருகின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத உணவுகளை விற்பனை செய்த விவகாரத்தில், மகளிர் குழுவின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறாக தங்களின் சுயநலத்திற்காக அம்மா உணவகத்தை வணிக செயல்பாட்டிற்காக மாற்றும் திமுகவினர், அம்மா உணவகத்தில் கை கழுவுவதற்கான சுகாதாரமற்ற நீர் மற்றும் தட்டுக்களை பயன்படுத்தும் நிலையை கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏழை, எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இது போன்று பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கான பில்களை பணியாளர்கள் தாங்களாகவே பேப்பரில் பில் எழுதி கொடுப்பதால், மாநகராட்சிக்கு முறைகேடான கணக்கை ஒப்படைத்து மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்துவதோடு, அம்மா உணவகத்தால் கடும் நஷ்டம் என கூறி அத்திட்டத்தை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கவுன்சிலர் தரப்பில் விளக்கம் கேட்டபோது, தாங்கள் பொதுமக்களின் வசதிக்காக குறைந்த விலையில் வழங்குவதாகவும், அரசியல்நோக்கோடு சிலர் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 774

    0

    0