மதுரையில் துரை தயாநிதி போட்டி…? ஆதரவாளர்களின் போஸ்டரால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு புகைச்சல்!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 4:43 pm

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதியின் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு நிலவி வருகிறது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டுமென அமைச்சர் உள்ளிட்ட தொடர்ச்சியாக தங்களது விருப்பங்களை கட்சி மேடைகளில் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, தற்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தரப்பில் மீண்டும் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதியை பெறுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, திமுகவில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகனான துரை தயாநிதி அழகிரி மூலமாக மீண்டும் மதுரை தொகுதி பெறுவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

மதுரையில் துரை தயாநிதி அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘2024 மதுரையின் நாயகரே வெல்க, தென் தமிழக அரசியலில் மதுரையே நிரந்தரம்,’ – என்ற வசனங்களுடன் அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களால் மீண்டும் மு.க அழகிரி தனது மகன் மூலமாக திமுகவில் நுழைவதற்கான முயற்சியயை தொடங்குகிறாரா? என்று திமுகவினரிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே, மதுரை மாநகரில் இரு பிரிவினராக திமுகவினர் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மூன்றாவதாக மு.க அழகிரியின் மகனும் உள்ளே வருகிறாரா என்ற அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள் இருந்து வருகின்றனர்.

இதனிடையே, துரை தயாநிதிக்கு சொந்தமான கிரானைட் நிறுவனம் மூலமாக மதுரை மேலூர் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதித்த அளவை விட கூடுதலாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதும், அதில் துரை தயாநிதி ஆஜராகிவருவதும் குறிப்பிடத்தக்கது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 422

    0

    0