ரமணா பட பாணியில் உயிரிழந்தவர்களுக்கு சிகிச்சை… கர்ப்பிணிகள் இறந்த சம்பவத்தில் திருப்பம்… மதுரை அரசு மருத்துவமனையில் பகீர்..!
Author: Babu Lakshmanan2 October 2023, 5:07 pm
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் தணிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 3 மற்றும் 7ஆம் தேதி மதுரை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த செம்மலர் மற்றும் குப்பி ஆகிய இரண்டு கர்ப்பிணிகள் மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரண்டு கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து, கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கான உரிய காரணம் அறிய தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், உயிரிழந்த கர்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படாததும், அனைத்து ஆவணங்களும் அவர்கள் இறந்த பிறகு திருத்தம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் உயிரிழந்த பிறகு அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதும், எந்த ஒரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் சிகிச்சை மேற்கொண்டதாக கர்ப்பிணிகள் உயிரிழந்த பிறகு ஆவணங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் தணிக்கை விவரம் – உயிரிழந்த கர்ப்பிணி செம்மலரின் தணிக்கை
01) 28-8-23 அன்று இதய சிகிச்சை நிபுணரை அழைத்துள்ளதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2) 28-8-23 மற்றும் 29-8-23 ஆகிய தேதிகளில் நோயாளிக்கு ஆஸ்பிரின் மாத்திரை தந்ததாக எழுதியிருந்ததை அழித்திருக்கிறார்கள்.
3) 31-08-23 காலை 7 மணிக்கு BT/ CT ( Bleeding time / Clotting time) எனப்படும் ரத்தம் உறையும் காலவிகிதம் குறித்த டெஸ்ட் பதிவுசெய்யப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது.
4) 31-8-23 மாலை 5 முதல் மாலை 5-15 மணி வரை வாந்தி எடுத்ததாகவும் வயிறு வீங்கி காணப்பட்டதாகவும் இறுதியில் உடல் சில்லென்று ஆகி கை கால் விரைத்தும் காணப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது.
5) தலைமை மருத்துவருக்கு 31-08-23 அன்று மாலை 5:45 மணிக்கு தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு புதிதாக கையெழுத்து போடப்பட்டுள்ளது.
6) 31-8-2023 மாலை 6 மணிக்கு நோயாளி இறந்த பின்னர் மெக்கானிக்கல் வென்டிலே வைக்கப்பட்டதாக புதிதாக எழுதப்பட்டுள்ளது.
7) 01-09-23 ஏழு மற்றும் எட்டு மணிக்கு சிகிச்சை குறிப்புகள் எழுதப்பட்டிருந்த பக்கம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்த கர்ப்பிணி குப்பி தணிக்கை கர்ப்பிணி ஓஜி இரண்டாவது யூனிட்டில் 18-7-2023 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே இறப்பதற்கு முன்பு வரை எழுதப்பட்டுள்ளது.
HR எனப்படும் ஹார்ட் ரேட் இதயத்துடிப்பு எண்ணிக்கையும் சிகிச்சையின் போது அளித்த மருந்துகள் விபரம் மற்றும் ஆய்வுகள் விவரம் இறந்த பிறகே எழுதப்பட்டுள்ளது. மேலும் எக்கோ எடுத்துள்ள விபரமும் அதே பக்கத்தில் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் திட்டப்படி எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் GRH-இல் உள்ள பிரசவ நிபுண மருத்துவர்கள் சென்று அங்குள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பற்றிய பிரச்னைகள் குறித்து முகாம் நடத்த வேண்டும் என்றும் எந்த மருத்துவரும் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து அவ்வாறு அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.
இவ்வாறு செல்லாத பிரசவ மருத்துவர்களையும் பிரசவத்தின் போது இறந்து போனவர்களின் சிகிச்சை வரலாறை உண்மைக்கு மாறாக திருத்தி எழுதியவர்களையும் பணியிடை நீக்கம் செய்யச் சொல்லி GRH டீனுக்கு அறிவுறுத்தியும் இன்று வரை அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. ஆகவே, தக்க நடவடிக்கை எடுக்குமாறு GRH டீன் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என மாவட்ட ஆட்சியர் தணிக்கை அனுப்பியுள்ளார்.
உயிரிழந்த கர்ப்பிணி செம்மலரின் கணவர் முதது கிருஷ்ணன் நம்மிடம் பேசிய போது :- என் மனைவிக்கு பிரசவம் நடந்து முடிந்த இரண்டு மணி நேரம் நன்றாக தான் இருந்தார். அதன் பிறகு அவரை மற்றொரு அறைக்கு மாற்றுவதற்காக ஊழியர்கள் அவரை தூக்கி போது கை தவறி கீழே விழுந்து விட்டார். இதில் ஏற்பட்ட அதிர்வில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இவை அனைத்தையுமே மருத்துவமனை நிர்வாகம் மறைத்து விட்டது. மேலும், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டநாளிலிருந்து பத்து நாள் வரை எந்தவிதமான சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. எனது மனைவிக்கு ஏற்கனவே இதய பிரச்னை இருக்கிறது என்று சொல்லியும் யாரும் செவி கொடுத்துக் கேட்கவில்லை. என் மனைவி கீழே விழுந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகுதான் அவசரமாக சிகிச்சை மேற்கொண்டனர்,” என்று கூறினார்.
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் தணிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0