மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம் தொடங்கியது : 2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2022, 8:47 am
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி பெருந்திருவிழா நடக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு திருவிழாவை கோலாகலமாக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
கள்ளழகர் ஆடிபெருந்திருவிழா கடந்த 4 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும், தங்க பல்லக்கில் எழுந்தருளி, அன்னம், கெருடவாகனம், சேஷ வாகனம், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக தேரில் பவனி வருகிறார்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.