மதுரையில் திமுகவின் பிம்பம் மாறிவிட்டது… சரியான திசையில் பயணிக்கிறோம்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!!
Author: Babu Lakshmanan4 March 2022, 5:01 pm
மதுரையில் திமுக பிம்பம் சில வகையில் தவறான திசையில் போய் கொண்டு இருந்ததாகவும், தற்போது அதனை மாற்றியுள்ளதாகவும் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் புதிய மேயர் பதவி ஏற்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது :- 6 வருடம் தாமதமாக உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்துடன் இந்த தேர்தலை சந்தித்தோம். ஏழு வருடம் அவல நிலையில் இருந்த தமிழ்நாடு நிதி நிலை, மேலாண்மை அரசாங்கம் ஆகியவற்றில் ஒரே மாதத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வந்ததன் அடிப்படையில் மக்கள் வரலாறு காணாத வெற்றியை வழங்கி உள்ளார்கள். அரசியலில் பலர் பல காரணங்களுக்காக வருவார்கள். எங்களை பொறுத்தவரை நீதிக்கட்சி காலத்தில் இருந்து அடிப்படை தத்துவம் கொள்கை சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.
இந்த தத்துவத்தில் நூறு ஆண்டுகளாக தமிழ்நாடு இருப்பதால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. எங்களது முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி இது திராவிட மாடல். திராவிட மாடலின் ஆரம்பம் சுய மரியாதை. எந்த நபருக்கெல்லாம் சுயமரியாதை இருக்கிறதோ, அவர்களுக்கு சுய சிந்தனை இருக்க வேண்டும். சுய சிந்தனை இருப்பவர்களுக்கு சுய நிர்ணயம் ஒரு உரிமை. சுய நிர்ணயத்தை உருவாக்குவது சுயாட்சி.
சுயாட்சி என்பது வெறும் மாநிலத்தின் உரிமை மட்டும் அல்ல மாமன்றங்கள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி எல்லாவற்றிலும் மக்களே அவர்களை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும் என்பது ஜனநாயகம். இது சுயமரியாதையின் தொடர்ச்சி. அந்த அடிப்படையில் மக்களுக்கு முக்கிய அரசாங்க அடுக்கு உள்ளாட்சியில் இருப்பது ஆகும்.
ஏனெனில் மக்களின் அடிப்படை தேவை குடிநீர், பாதாள சாக்கடை, குப்பை அகற்றல், சாலைகள், தெரு விளக்குகள் இவை எல்லாம் உள்ளாட்சியின் உரிமை கடமை ஆகும் .அது சிறந்த அளவில் செயல்பட்டால் தான் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். கடந்த ஐந்து ஆண்டு காலமாக தேர்தலை நடத்திடாமல் ஜனநாயக படுகொலை நடந்தது.
அதன் பிறகும் வார்டு மறுவரையரை குளறுபடியாக செய்யப்பட்டது. நானே அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றேன். இருந்தாலும் கால தாமதம் ஏற்படாமல் இருக்க பழைய மறுவரையறையிலே தேர்தலை சந்தித்தோம். முதல்வர் செயல்பாடு, அரசாங்கத்தின் செயல்பாடு, மக்களின் நம்பிக்கையால் இந்த மாபெரும் வெற்றியை பெற்றோம். இன்றைக்கு மதுரை மாநகர வரலாற்றில் புது ஆரம்பம். இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்பான்மையும், சிறந்த ஒரு மேயரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். இரண்டு பட்டங்கள் பெற்றவர். சமூகத்தோடு இணைந்து செயலாற்றுபவர்.
எந்த ஒரு கறையும் கரங்களில் இல்லாதவர். நல்ல வரலாற்றில் வந்தவர். திராவிட கொள்கைகளுக்கு விசுவாசம் வைத்திருப்பவர். இதனால் இந்த ஐந்து வருடம் இந்த உள்ளாட்சி காலத்தில் இதுவரைக்கும் அடையாத வளர்ச்சியும் அடையாத முன்னேற்றமும் உட்கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, மாஸ்டர் பிளான், சீர் திருத்தம் என எதனை எடுத்துக்கொண்டாலும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பல காலங்களில் மதுரையில் திமுகவின் பிம்பம் சில வகையில் தவறான திசையில் போய்க்கொண்டு இருந்தது. இதனை திருத்தும் வகையில் கடந்த தேர்தல்கள் அனைத்திலும் எந்த வித களங்கமும் இல்லாமல், முறைகளுக்கு உட்பட்டு தெளிவாக யாரும் குறை சொல்ல முடியாத அளவில் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. இது மதுரையில் திமுகவில் இன்றைக்கு இருக்கிற தெளிவான பிம்பம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு மிக முக்கியமாக மகத்தான பொறுப்பில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் அமர்ந்து இருந்த இருக்கையில், இந்திராணி பொன் வசந்த் அமர்ந்து இருக்கிறார். அவர் மிகச்சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலுக்கு வரும் பொழுதே அனுபவம் நிர்வாகத்திறன் பெற்று அனைவரும் வருவது இல்லை. மக்களுடன் உள்ள தொடர்பு, மக்கள் மேல் வைத்துள்ள பற்று, மனிதநேயம் இவை தான் ஜனநாயக நாட்டில் முக்கியம். எனவே மாநிலத்தில் எங்களுடைய ஆலோசனைகள், இங்கு இருக்கும் நிர்வாகிகளின் ஆலோசனைகளை பெற்று வெற்றிகரமாக செயலாற்றுவார், என்றார்.