மதுரை ரயில்நிலையத்தில் கைகளால் மலம் அள்ளும் அவலம்… வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்த தூய்மை பணியாளர்கள்!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 8:37 pm

மதுரை ரயில்வே நிலையத்தில் கைகளால் மலங்களை அள்ளுவதாக வீடியோ ஆதாரத்துடன் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

மதுரை கோட்ட ரயில்வேயில் பணி புரியக்கூடிய தூய்மை பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் மதுரை ரயில்வே மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆணைய தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, பேசிய சில தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு ஒப்பந்தப்படியான ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும், தங்களுக்கான தேவைகள் குறித்து ஒப்பந்த நிறுவனங்களிடம் கேட்டால், தங்களை வேலையில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு 3 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் போனஸ் பெற்றதாக ஒப்பந்த நிறுவனம் கையெழுத்திடுமாறு மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, பெண் தூய்மை பணியாளர்களிடம் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் யாரிடம் புகார் அளிப்பீர்கள் எனவும், எஸ்சி எஸ்டி பட்டியலின பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் யாரிடம் புகார் அளிப்பீர்கள் எனவும் கேட்டார். அதற்கு தூய்மை பணியாளர்கள் யாரிடம் கொடுப்பது என தெரியாது என கூறியதால், தூய்மை பணியாளர்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறை, பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுப்பது குறித்த உரிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என ரயில்வே கோட்ட மேலாளரிடம் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆணையத்தலைவர் வெங்கடேசிடம் பேசிய தூய்மை பணியாளர் ஒருவர், தங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை உள்ளிட்டவைகளை மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வழங்குவதாகவும், இதன் காரணமாக ரயிலில் உள்ள கழிப்பறைகளில் கைகளால் மலத்தை அள்ளும் நிலை உள்ளதாகவும் கூறி, அதனை வீடியோ ஆதாரத்துடன் காட்டி புகார் அளித்தார். இதனைப் பார்த்த ஆணைய தலைவர் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், என தெரிவித்தார். தூய்மை பணியாளரின் குற்றச்சாட்டால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :- மதுரை ரயில்வேயில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு 600க்கு 365தான் கிடைப்பதாகவும் தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் தராத ஒப்பந்த நிறுவனத்திற்கான அனுமதி ரத்து செய்ய வேண்டும் என கோட்ட மேலாளரிடம் கூறியுள்ளேன்.

இதுவரை ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு PF எண் கூட அளிக்கவில்லை எனவும், ஏராளமான தூய்மை பணியாளர்களுக்கு போனஸ் இதுவரை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. ஆனால் சில பணியாளர்களிடம் போனஸ் வாங்கியது போல ஒப்பந்த நிறுவனங்கள் கையெழுத்து கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். போனஸ் பெற்றால் மட்டுமே கையெழுத்து இட வேண்டும் என அறிவுறுத்தியதலாக தெரிவித்தார்.

தூய்மை பணியளர்களுக்கு ஊதியம் குறைவு தான் பிரதான பிரச்சனையாக உள்ளது. ரயில்வேயில் பணிபுரியும் பெண் தூய்மை பணியாளர்கள் மற்றும் பட்டியலின தூய்மை பணியாளர்களுக்கு எதிராக நிகழும் துன்புறுத்தல் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே அலுவலகங்களில் தொலைபேசி எண் மற்றும் அதிகாரிகள் பெயரை அச்சிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன், என்றார்.

மேலும், இது குறித்து தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளேன், என்றார்.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கூறி ரயில்வேயில் பணம் பெற்றுவிட்டு அந்த பணம் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுக்கவில்லை என்றால், அந்த ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து பணத்தை ரயில்வேக்கு மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் தெரிவித்தார்.

ரயில்வேயில் கையால் மலம் அள்ளும் நிலை ஒழிக்கப்பட்டதாக தெரிவித்த நிலையில், தற்போது கையால் மலம் அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பணியாளர்களை ஈடுபடுத்திய ஒப்பந்த நிறுவன அனுமதி தடை செய்யப்படும். கையால் மலம் அள்ளும் புகார் குறித்து உறுதியானால் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார். கையால் மலம் அள்ளம்கு வீடியோ புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

கையால் மலம் அள்ளும் புகார் குறித்து விளக்கம் கேட்டு ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என தெரிவித்த வெங்கடேசன், தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான ஒப்பந்த பணி முறையை ரத்து செய்ய வேண்டும், ஆந்திரா கர்நாடகாவை போல DPS பணி முறையை அமல்படுத்த வேண்டும் என்றார். 1993 லிருந்து தமிழகத்தில் 225 பேர் மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளது . மலக்குழி மரணத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், உரிய இயந்திரங்களை மாநில அரசு வாங்க வேண்டும், என்றார்.

எவ்வளவு பணம் கொடுத்தாலும் மலக்குழியில் இறங்க மாட்டேன் என தூய்மை பணியாளர்கள் உறுதியோடு இருக்க வேண்டும்.
ஏழ்மை நிலையால் சில தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் குழி , மலக்குழிகளில் இறங்கும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், என்றார்.

தற்போது, நிரந்தர தூய்மை பணியாளர் ஓய்வுபெறும் போது அதற்கு தற்காலிக பணியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த தொழிலில் பட்டியலினத்தவர்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரமற்ற நலவாரியம் உள்ளது. ஆனால், அதிகாரமுள்ள ஆணையம் இல்லை.

எனவே, மாநில அளவில் ஆணையம் வேண்டும் என கவர்னரிடம் கூறியுள்ளோம், என்றார்.

  • shakeela talks shruthi narayanan video that is original video அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…