கோவில்களில் அரசின் சார்பில் மகா சிவராத்திரி விழாவை நடத்தலாமா…? எதிர்க்கும் கி. வீரமணி, திருமா.,… இந்து அறநிலையத்துறையால் தவிக்கும் தமிழக அரசு…!!
Author: Babu Lakshmanan28 February 2022, 6:22 pm
மகாசிவராத்திரி
மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளன்று மகா சிவராத்திரி வருவது குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த விழா குறித்து இரண்டு நாட்களுக்கு முன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி திமுகவின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்திற்கும், கூட்டணியின் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருப்பது தெரிகிறது.
கி.வீரமணி எதிர்ப்பு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆவேசமான அறிக்கையில், “இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கு மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்” என்று செய்தியாளர்களிடம் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
விரிவாக விளக்கியிருக்கிறார்.
இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி. இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.
இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள்! பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்றவர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?” என்று வீரமணி காட்டாமாக குறிப்பிட்டுள்ளார்.
விசிக கொந்தளிப்பு
அவரைப்போலவே விசிக தலைவர் திருமாவளவன், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசும் கொந்தளித்துப் போய் உள்ளனர் என்பதும் தெரிகிறது.
இந்த விழா குறித்து வன்னியரசு கூறுகையில் “ஆன்மிக பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இச்செயலை அனுமதிக்கக் கூடாது” என்று கறார் காட்டியிருக்கிறார்.
வீரமணி, திருமாவளவன் ஆகியோர் அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இருந்தாலும் கூட இதை மறைமுகமாக திமுக அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
ஆகமவிதிகளுக்குட்பட்டது
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “மகா சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை, மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்துவதை வீரமணியும் திருமாவளவனும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திருத்தணி முருகன் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளி வேலை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் வழங்கி மகிழ்ந்தனர். அந்த வேலுடன் ஸ்டாலின் போஸும் கொடுத்தார். மேலும் பிரசார கூட்டங்களில் திமுகவில் ஒரு கோடிக்கும் மேலான இந்துக்கள் உள்ளனர் என்றும் தனது மனைவி துர்கா ஆன்மிக நம்பிக்கை உள்ளவர். அவ்வப்போது கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர் என்றும் பெருமிதத்துடன் பலமுறை கூறியிருக்கிறார்.
அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது ஸ்டாலின் நேரடியாக சென்று அந்த விழாக்களில் பங்கேற்பதும் அந்த மதத்தினரின் முக்கிய பண்டிகைகளின்போது வாழ்த்து தெரிவிப்பதும் வழக்கம்.
திமுக ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு தற்போது அனைத்து மத மக்களுக்கும் அவர் பொதுவானவர் என்பதால் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் விழாக்களை அவர் ஆதரிப்பது சரிதான்.
சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது கூட முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆகம விதிகளின்படி மகா சிவராத்திரி விழா நடைபெறும் என்றுதான் கூறியிருக்கிறார். அதை வீரமணி, திருமாவளவன் போன்ற தலைவர்கள் புரிந்துகொண்டது போல தெரியவில்லை. மகாசிவராத்திரி விழா குறித்த முடிவை ஸ்டாலினிடம் தெரிவிக்காமல் அமைச்சர் சேகர்பாபு மட்டுமே எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
செய்தியாளர் சந்திப்பு தவிர்ப்பு
இந்த நிலையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மகா சிவராத்திரி விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பை இன்று அமைச்சர் சேகர்பாபு திடீரென தவிர்த்து விட்டார்.
தற்போது திராவிடர் கழகமும், விசிகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் இந்து சமய அறநிலையத்துறையின் மகா சிவராத்திரி விழா குறித்து ஸ்டாலின் என்ன முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பை தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் ஏற்படுத்தி இருக்கிறது.
0
0