பார்ப்பனர்களை திருப்திபடுத்த இப்படிச் செய்வதா..? கி.வீரமணி எச்சரிக்கை.. ஜகா வாங்கினாரா அமைச்சர் சேகர்பாபு..?
Author: Babu Lakshmanan28 February 2022, 1:21 pm
இந்து அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனமும், குற்றச்சாட்டும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், திமுக இந்துக்களுக்கான கட்சியும் கூட என அடிக்கடி சொல்லி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், இந்துக்களை கவர்வதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் நாளை மாலை மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, இந்து அறநிலையத்துறையின் சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பங்கேற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்து அறநிலையத்துறை வரலாற்றில் முதல்முறையாக மகாசிவராத்திரியன்று 100க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் என்று விரிவாக செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு விளக்கியிருக்கிறார்.
இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி. இந்து அறநிலையத்துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்வடுவதோ அல்ல. கோவில் சொத்து வரவு – செலவுகளைக் கண்காணிப்பதும், சரிபார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும்தான்.
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்த போது, இந்து அறநிலையத்துறையும், அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார்.
அப்போது, ஆன்மிகவாதிகள் பெரிய அளவில் பிரச்சனையாக்கி போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பணி என்பது – ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா..? என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடவது இல்லை, என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் – அமைச்சர் நாவலர்.
தந்தை பெரியார் ‘பலே பலே நெடுஞ்செழியன்’ என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
இந்து அறநிலையத்துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள். பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச்சார்பற்றவர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா..? அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சனையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா..?, எனக் குறிப்பிட்டிருந்தார்.
கி.வீரமணியின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து இன்று காலை சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் மகா சிவராத்திரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் சேகர்பாபு தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
இதனை பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக இந்துக்களுக்கான கட்சி என நினைத்திருந்தால், கி.வீரமணி அறிக்கைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை புறக்கணித்திருக்கக் கூடாது என்றும், இந்துக்களின் ஓட்டுக்களுக்காகவே மகா சிவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து திமுக நாடகமாடுவதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
0
0