மகா சிவராத்திரி கோலாகலம்… லிங்கோத்பவருக்கு ருத்ராட்சத்தால் சிறப்பு அபிஷேகம் ; விடிய விடிய பக்தர்கள் வழிபாடு..!!!
Author: Babu Lakshmanan9 March 2024, 9:31 am
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மகா சிவராத்தியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு ருத்ராட்சத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.
திருமால், பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டியிட்ட போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.
திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காணவும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார்.
இருவரும் வெகு காலங்கள் தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்து தங்களது அகந்தையை நீங்கி சிவனை வணங்கி நின்ற போது ,சிவபொருமான் அடிமுடி காண இயலாத ஜோதிப்பிழம்பாக லிங்கோத்பவர் மூர்த்தியாக காட்சி தந்தார். இந்த மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி திதியாகும். இந்த சிறப்பு வாய்ந்த மகா சிவன் ராத்திரி உருவான இடமும் திருவண்ணாமலையாகும்.
மகா சிவராத்தியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில், அண்ணாமலையார் சன்னதி பின்புறம் லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிரதம்,ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவனுக்கு வைத்து வழிபடும் தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் நள்ளிரவு 12 மணியளவில் லிங்கோத்பவர் அபிஷேகத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓரே நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி தினத்தில் இரவு முழுக்க பக்தர்கள் கண்விழித்து சிவனின் அருளை பெற இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளும் பட்டிமன்றங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. மேலும் திருக்கோவிலுக்குள் உள்ள பக்தர்கள் லிங்கோத்பவரின் அபிஷேகத்தை காண கோவில் வளாகத்தில் பெரிய எல்இடி திரைவைக்கப்பட்டு திரையிடப்பட்டது.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
மகா சிவராத்திரி விழா நடைபெறுவதற்கு சிவனுக்கு இரவு 8 மணி 10 மணி 12 மணி 2 மணி என நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதை ஒட்டி பக்தர்கள் அனைவரும் இரவு முழுவதும் கண் விழித்திருந்து,
இந்த பூஜையில் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரி விழா நடைபெறுவதை யொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர்.
0
0