678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சிவலிங்கம் : மகாசிவராத்திரியை முன்னிட்டு உலக சாதனையை படைத்த சேலம்!!

Author: Babu Lakshmanan
1 March 2022, 7:01 pm

சேலம் : சேலத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சந்தன சிவலிங்கங்கள் உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது.

சிவபெருமானுக்கு உகந்த நாளான மாசி மாதத்தில் அமாவாசை முதல் நாளன்று வரக்கூடிய ராத்திரி மகா சிவராத்திரி. இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு நேரத்தில் செய்யப்பட்டு பக்தர்கள் கண்விழித்து விரதம் மேற்கொண்டால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் உலகம் முழுவதும் மகா சிவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்திலும் அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில் வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் மற்றும் பொன்னம்மாபேட்டை ஆரிய சமாஜம் இணைந்து மகா சிவராத்திரி வைபவம் கொண்டாடப்பட்டது. தூய்மையான 678 கிலோ சந்தன பவுடரை கொண்டு பத்தாயிரத்து எட்டு சிவலிங்கங்கள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற எழுத்தின் வடிவில்10,008 சிவலிங்கங்களை வைக்கும்போது, ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என கூறி சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டு வடிவமைத்தனர்.

தொடர்ந்து, சிவாச்சாரியார் 10008 சிவலிங்கத்திற்கும், சிவனுக்கும் லட்சார்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பினர். இதுவரை சந்தனத்தால் லிங்கங்கள் செய்யாத நிலையில், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு 10008 சந்தன லிங்கங்கள் அமைக்கப்பட்டது விருக்க்ஷா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் உலக சாதனையில் 10008 சந்தன லிங்கங்கள் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் குமரேசன் கூறும்போது, உலக அமைதிக்காகவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், இதுவரை யாரும் செய்யாத அளவில் தூய்மையான சந்தனப் பவுடரை 10008 சந்தன லிங்கம் தயாரித்து வடிவமைக்கப்பட்டது. அதற்கு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இதனை மக்கள் இல்லங்களில் வைத்து வழிபட தொடர்ந்து மூன்று நாட்கள் பூஜை செய்யப்பட்டு மூன்றாம் நாள் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தன லிங்கங்கள் வழங்கப்படும், என தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1512

    0

    0